56 எம்.பி.டி.ஆச்சார்யா

பாரத நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போராடிய காந்திய வழி அகிம்சை போராட்ட வீரர்களைப் பற்றி பார்த்துக்கொண்டு வந்தோம். இந்திய சுதந்திரம் காந்தியடிகள் முன்னின்று நடத்திய அகிம்சை வழிப் போராட்டத்தினால்தான் இறுதியில் கிடைத்தது என்பது உண்மை. ஆனாலும் பால கங்காதர திலகரின் வழிவந்த பலர் காந்திஜி இந்திய அரசியலுக்கு வருவதற்கு முன், ‘அகிம்சை’ எனும் கோட்பாடு அறிமுகமாகாத வரை, எந்த வகையிலேனும், அது வன்முறை வழியாக இருந்தாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுவது என்று முடிவெடுத்தார்கள். காந்திஜியின் தொண்டர்கள் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், ஆளுவோரின் அராஜகங்களால் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். அடிபட்டிருக்கின்றனர். தீராக கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அது போலவே திலகர் வழி வந்தவர்கள் வன்முறை, கொலை இவற்றில் ஈடுபட்டாலும்அவர்களது தியாகங்கள் மட்டும் சாதாரணமானதா. உயிரைத் துச்சமாக மதித்து அன்னியனை இந்த மண்ணை விட்டு அகற்றிட அவர்கள் பட்டபாடு, நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது. இந்த இருவகை தேசபக்தர்களின் நோக்கம் ஒன்றுதான்; எனினும் வழிமுறை மட்டும் வேறுவேறானது. எந்த வழியில் பாடுபட்டால் என்ன, நாம் சுதந்திரம் பெற வேண்டும், அன்னிய ஏகாதிபத்தியம் மூட்டை முடிச்சுக்களுடன் கப்பல் ஏற வேண்டுமென்பதுதான் அந்த இரு சாராரின் கருத்து என்பதால், இத்தகைய தியாகிகளுக்கிடையே நாம் பாரபட்சம் பார்க்க முடியாது.

இந்திய சுதந்திர வரலாற்றில் அதிக அளவில் வன்முறையில் நம்பிக்கை வைத்து போராடிய தியாகசீலர்கள் வடநாட்டில் மிக அதிகம். தெற்கே ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் நடந்த போதிலும் வ.வெ.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், எம்.பி.டி.திருமலாச்சாரி, பாஷ்யம் அனும் ஆர்யா, ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை போன்ற சிலர் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கத்தான் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்காங்கே பரவியிருந்த இவ்வன்முறை அரசியல், 1942இல் ஆகஸ்ட் புரட்சியென்று வெடித்துப் புறப்பட்டது. அதில் ஏராளமானோர் காந்தியத் தொண்டர்கள் உட்பட பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார்கள். தேவகோட்டை தேசபக்தர்களை விடுவிக்க திருவாடனை கிளைச்சிறை உடைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்களைத் தப்ப வைத்தனர். குலசேகரப்பட்டினத்தில் அமைதியாகக் கூட்டம் முடிந்து திரும்பியவர்களை குடிவெறியில் சுடத்தொடங்கிய டி.எஸ்.பி. ஒருவரை தொண்டர்கள் அடித்தே கொன்றனர். தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. இப்படியும் ஒரு பகுதியினர் சுதந்திரப் போரில் பங்கு பெற்றிருக்கிறார்கள் அல்லவா? அந்த தியாக சீலர்களுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

எம்.பி.டி.ஆச்சார்யா பற்றி பார்ப்பதற்கு முன், முந்தைய பாராவில் குறிப்பிட்ட “குலசேகரப்பட்டினம் கொலை வழக்கு” பற்றியும் அதில் தண்டனை பெற்ற விவரங்களையும், ஒரு இந்திய ஐ.சி.எஸ். அதிகாரி வழங்கிய தீர்ப்பில் இருந்த ஆத்திரம் எப்படிப்பட்டது என்பதையும் ஒரு சிறிது பார்க்கத்தான் வேண்டும். 1942 ஆகஸ்ட் மாதம், பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானத்தில் பேசி, இதை “செய் அல்லது செத்து மடி” என்று அறைகூவல் விட்டபின், அன்று இரவே அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. தொண்டர்கள் பொங்கு எழுந்தனர். தலைவர்களை எங்கு கொண்டு சென்றார்கள், என்ன செய்தார்கள் என்றே தெரியாத குழுப்ப நிலை. என்ன செய்கிறோம் என்று புரியாமல் ஆங்காங்கே வன்முறை வெடித்தெழுந்தது. நாடே புரட்சித்தீயில் எரியத்தொடங்கியது.

அப்போது தெற்கே திருநெல்வேலிக்கருகே ஆறுமுகனேரி எனும் இடத்தில் கே.டி.கோசல்ராம் எனும் புரட்சிக்கார காங்கிரஸ்காரர் பெரும் கூட்டத்தைக் கூட்டி ஏதோ திட்டமிட்டார். கூட்டம் முழுவதும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தங்களது உதிரத்தால் கையெழுத்திட்டு உயிரைக்கொடுக்கவும் தயார் என்று முழக்கமிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஒரு தற்கொலைப்படை அமைக்கப்பட்டது. அதில் பங்கு பெற்றோர் பி.எஸ்.ராஜகோபாலன், காசிராஜன், கடையனோடை மகாராஜன், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு சிவந்திக்கனி, பரமன்குறிச்சி நாகமணி வாத்தியார், செட்டியாபத்து அருணாசலம், வாழவல்லான் பச்சப்பெருமாள், இராமலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோர் தற்கொலைப்படை வீரர்கள்.

இவர்கள் அனைவரும் மெய்ஞானபுரம் தபால் அலுவலகத்தைச் சூரையாடிவிட்டு தலைமறைவாயினர். இவர்களைக்கண்டவுடன் சுட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். செப்டம்பர் 29 அன்று குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கூட்டம் நடத்திவிட்டு புரட்சி வீரர்கள் திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது விடியற்காலை 4 மணி சுமாருக்கு வழியிலிருந்த முசாபரி பங்களாவின் வாசலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி வயிறு முட்ட குடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு சாலையில் போய்க்கொண்டிருந்த தொண்டர்களை வழிமறித்து தகறாறு செய்தான். தன் கை துப்பாக்கியை எடுத்து பி.எஸ்.ராஜகோபாலனின் நெற்றியில் வைத்து அழுத்தி சுடத் தயாரானான். சும்மா இருப்பார்களா தொண்டர்கள். அவன் மீது பாய்ந்து ஒருவர் தன் கையிலிருந்த வேல் கம்பை அந்த லோன் மார்பில் பாய்ச்சினார். அருகிலிருந்தவர்கள் அவனை அரிவாளால் சரமாரியாக வெட்டித்தள்ளினர். 64 வெட்டுக் காயங்களோடு அவன் இங்கிலாந்து போய்ச்சேருவதற்கு பதில் எமலோகம் போய்ச்சேர்ந்தான்.

ராஜகோபாலன், காசிராஜன் உட்பட 21 பேர் மீது வழக்கு. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வி.பாலகிருஷ்ண ஐயருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. 1944 பிப்ரவரி 6ல் தீர்ப்பை வழங்கினார். காசிராஜன், ராஜகோபாலன் இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்தார். அது போதாது என்று நினைத்தாரோ என்னவோ, அவர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் (60 ஆண்டுகள்) இதுதவிர மேலும் 14 ஆண்டு தண்டனையும் கொடுத்தார். மொத்தத்தில் ஒரு தூக்கு தண்டனை 74 ஆண்டு கடுங்காவல் தண்டனை. அப்போது ராஜகோபாலன் கேட்டார், “ஐயா நீதிபதி அவர்களே எங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு அது போதாதென்று 74 ஆண்டு சிறை தண்டனையும் கொடுத்திருக்கிறீர்களே, இந்த 74 ஆண்டு சிறை தூக்குக்கு முன்பா அல்லது பின்பா என்று கேட்டனர். அந்த சூழ்நிலையிலும் தேசபக்தர்கல் உயிரை மதிக்காமல் கேலி செய்து அந்த நீதிபதியைத் தலைகுனிய வைத்தனர். கோர்ட்டே சிரித்தது.

சரி! இனி எம்.பி.டி.ஆச்சார்யாவிடம் வருவோம். இந்திய சுதந்திரம் பற்றி ரஷ்யாவின் ஒப்பற்ற தலைவர் லெனினைச் சந்திக்க பல குழுவினர் சென்றனர். அதில் இடம்பெற்ற இரு தமிழர் எம்.பி.டி.ஆச்சார்யா, வீரன் செண்பகராமன் பிள்ளை ஆகியோர். மண்டையம் பிரதிவாதி திருமலை ஆச்சார்யா என்ற பெயரின் சுருக்கம்தான் எம்.பி.டி.ஆச்சார்யா. மண்டையம் என்பது மைசூர் பக்கம் உள்ள ஒரு கிராமம். இங்கிருந்து குடிபெயர்ந்து சென்னையில் குடியேறிய மண்டையம் குடும்பத்தார் இந்திய விடுதலைக்காகப் பல தியாகங்களைச் செய்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தார் செய்திருக்கிற மாபெரும் காரியங்களைத் திரட்டி வெளியிட வேண்டாமோ? புரட்சிக்கவி பாரதிக்கும் இந்தக் குடும்பதான் பல பெரிய உதவிகளைச் செய்திருக்கிறது. இவர்கள் தொடங்கிய “இந்தியா” பத்திரிகை மூலம்தான் பாரதி தனது அக்கினி ஜ்வாலையை ஆங்கில அரசுக்கு எதிராக வீசினான். இந்த மண்டையம் குடும்பத்தில் குறிப்பிடத்தகுந்த தேசபக்தர்கள் மண்டயம் திருமலாச்சார்யா, மண்டயம் எஸ்.எண்.திருமலாச்சார்யா, மண்டையம் சீனிவாசாச்சார்யா போன்றவர்கள்.

“இந்தியா” பத்திரிகையை சென்னையிலும், பிறகு புதுச்சேரியிலும் நிறுவி சுதந்திரக் கனல் பரப்பி வந்தார்கள். 1917இல் ரஷ்யாவில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. கொடுங்கோலன் ட்ஸார் மன்னன் வீழ்ந்தான். இது குறித்து, அப்போதே மார்க்சீயத்திலும், வன்முறையிலும் நம்பிக்கை வைத்திருந்த எம்.பி.டி.ஆச்சார்யாவின் செல்வாக்குதான் பாரதி ரஷ்ய புரட்சியைப் போற்றிப் பாட காரணமாக இருந்திருக்கலாம். இவர் இந்தியாவில் இருந்த வரை அதிகம் கவனிக்கபடாதவராக இருந்த போதிலும், கடல் கடந்து அயல்நாட்டுக்குப் போய் அங்கு புரட்சி இயக்கங்களில் ஈடுபட்ட போதுதான், அடடா, இவர் இந்தியாவில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார் என்று சிந்தித்தார்கள் போலும். இவர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமான “இந்தியா ஹவுஸ்’ எனும் இல்லத்தில் வீர சாவர்க்கர், வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். உலகங்கெணும் புரட்சி இயக்கத்துக்கான வித்தை இவர் பல நாடுகளிலும் சென்று விதைத்தார். பெர்லின், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களிலும் இவர்கள் தங்கள் கிளைகளை நிறுவினார்கள். “உலக சோஷலிஸ்ட் இயக்கங்கள் இந்திய விடுதலையில் அதிக அக்கறை காட்டவில்லை” என்று கருதினார்கள்.

ரஷ்யாவில் நடந்த மாபெரும் மக்கள் புரட்சி எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கு ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. இந்த புரட்சி ‘யுகப்புரட்சி’ என்று பாரதியால் புகழப்பட்டது. இந்த புரட்சியின் விளைவாக இந்தியாவிலும் ஓர் புரட்சியைத் தோற்றுவிக்க முடியும் என்றும் இவர் நம்பினார். கம்யூனிஸ்ட் அகிலம் எனப்பட்ட குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாயகானாகக் கருதப்படும் எம்.என்.ராய்க்கும் எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. கிலாபத் இயக்கத்தையொட்டி ஆப்கானிஸ்தானில் இந்திய விடுதலைக்காக ஒரு ராணுவப் பயிற்சிக்குத் திட்டமிட்டார். ஆனால் அன்றைய ஆப்கன் அரசு ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டம் தோல்வியுற்றது.

பல காலம் அன்னிய மண்ணில் இந்திய விடுதலை நாடி சுற்றித் திரிந்து, உலக நாடுகளில் பலவற்றிலும் புரட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு எந்த வகையிலும் எதுவும் பயனளிக்கவில்லை என்ற நிலை வந்ததும், அவர் இந்தியா திரும்பி பம்பாயில் பலகாலம் வாழ்ந்து பின் மறைந்து போனார், எவ்வளவோ புரட்சிக்காரர்களின் வாழ்க்கையைப் போலவே. வாழ்க புரட்ச்சிகாரர் எம்.பி.டி.ஆச்சார்யா புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.