79 எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

சினிமாவும், தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுது போக்குச் சாதனாமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக் காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ஏற்பட்டது. இவர் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழில் நாடக நடிப்பு. தனது தொழில் துறையிலேயே மக்களுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சுதந்திர தாகத்தை உருவாக்க வேண்டுமென்று இவர் முடிவு செய்து கொண்டார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் ஓர் நல்ல நாடக ஆசிரியரும்கூட. இவருடைய நாடகங்களில் எல்லாம் தேச உணர்வைத் தூண்டும்படிதான் எழுதுவார். பார்ப்பவர்களுக்கும் அவை ஓர் புதிய எழுச்சியை உருவாக்கும்.

இவர் நாடகங்களில் மக்கள் உணர்வுகளைத் தூண்டச் செய்யும் விதத்தில் மகாகவி பாரதியாரின் “கரும்புத் தோட்டத்திலே” எனும் பாடலையும், ஜாடையாக வெள்ளைக்காரர்களைக் குறிப்பிட்டு “கொக்கு பறக்குதடி” என்ற பாடலும் பிரசித்தம். “கதர் கப்பல் வருகுதே” என்றொரு பாடல். அது தேசிய சிந்தனையை ஊட்டுவதாக அமைந்தது. காங்கிரஸ் இயக்கத்துக்காக யார் யாரெல்லாம் அழைக்கிறார்களோ அங்கெல்லாம் போய் நாடகம் போட்டு ஆங்காங்கு தேசபக்தியை ஊட்டிவந்தார் இவர். இவர் நாடகங்களின் மூலம் வசூலாகும் பணத்தையும் தேச சுதந்திரப் போராட்டத்துக்கு அர்ப்பணித்து வந்தார். பல நேரங்களில் போலீசார் வந்து நாடகத்தைப் பாதியில் நிறுத்தி விடுவார்கள். இவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட்டால், இவர் சிறை செல்வதையே வழக்கமாகக் கொண்டார்.

விடுதலையாகி வெளியே வந்த பிறகும் மீண்டும் அதே நாடகத்தைப் போடுவார், அதே வசனங்களைப் பேசுவார். தடையை மீறியும் பல நேரங்களில் இவர் நாடகங்களை நடத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய நாடகங்கள் அனேகமாக புராண நாடகங்கள்தான். அதில் இவர் முருகனாகவோ, சிவனாகவோ நடித்துக் கொண்டிருப்பார். இவரை மேடையிலேயே வைத்து கைது செய்து கொண்டு போவார்கள். அப்போது விஸ்வநாத தாஸாக இல்லாமல் முருகனாகவோ, சிவனாகவோதான் சிறைக்குச் செல்வார். ஒரு முறை இவர் திருநெல்வேலியில் நாடகம் போட்டு கைதானபோது இவருக்காக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வழக்கில் வந்து வாதாடியிருக்கிறார்.

இவர் சிறைப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கொதித்தெழத் தொடங்கினர். போலீசாரோடு மோதினர். இவர் மதுரை ஜில்லா போர்டு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருமங்கலம் காங்கிரஸ் கமிட்டிக்கு இவர் நிறைய நிதி சேர்த்துக் கொடுத்திருக்கிறார். இப்படி தன் வாழ் நாளெல்லாம் நாடகம், நாட்டுப்பணி, சிறைவாசம் என்றிருந்தவரின் முடிவு அற்புதமானது.

சென்னையில் இவர் ஒரு நாடகத்தில் முருகனாக வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்தார். நாடகத்தின் முடிவில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையோடு காட்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் அப்போதே அவர் ஆவி பிரிந்து காலமாகிவிட்டார். மக்கள் கலங்கிப் போனார்கள். மயில் வாகனத்தின் மீது முருகனாகக் காட்சியளித்தவர் அடுத்த நொடி பிணமாகப் போனது அனைவரையும் பாதித்து விட்டது. வாழ்க தியாக விஸ்வநாததாஸ் புகழ்!

எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பாடிய “கொக்கு பறக்குதடி”

இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு தனது நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை நாடெங்கும் பறப்பிய தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் அவர்களை அறியாதார் யார்? அவருடைய ‘வெள்ளை கொக்கு பறக்குதடி” எனும் அது எந்த நாடகமாக இருந்தாலும் மக்கள் பலமுறை பாடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த முழுப்பாடலும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய அந்தப் பாடலை இயற்றியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். அதனை நாடக மேடைகளில் பாடி பெருமை சேர்த்தவர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ். தன் நாடகமொன்றில் முருகன் வேடமிட்டு மயில் மீது அமர்ந்தபடி அமரரான அந்த தேச விடுதலைப் போராட்ட வீரர் பாடிய அந்தப் பாட்டிப் படியுங்கள். அந்த தியாக புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

கொக்கு பறக்குதடி பாப்பா!

கொக்குப் பறக்குதடி பாப்பா நீயும்
கோபமின்றி கூப்பிடடி பாப்பா (கொக்கு)

கொக்கென்றால் கொக்கு நம்மைக்
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே
ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா (கொக்கு)

வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
அடித்துக் கொழுக்குதடி பாப்பா (கொக்கு)

தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு – அது
தின்ன உணவில்லாத கொக்கு பொல்லா
மாமிச வெறிபிடித்த கொக்கு இங்கே
வந்து பறக்குதடி பாப்பா (கொக்கு)

கொந்தலான மூக்குடைய கொக்கு அது
குளிர்பனி கடல் வாசக் கொக்கு
அந்தோ பழிகாரக் கொக்கு நம்மை
அடக்கி ஆளுதடி பாப்பா (கொக்கு)

மக்களை ஏமாற்ற வந்த கொக்கு அதன்
மமதை அழிய வேண்டும் பாப்பா
வெட்க மானமில்லா அந்தக் கொக்கு இங்கே
மடியப் பறக்குதடி பாப்பா (கொக்கு)

பஞ்சாபில் படுகொலை செய்த கொக்கு அது
பழி பாவம் பார்க்காத கொக்கு
அஞ்சாமல் பாஸ்கரன் தமிழ்பாடி அதை
அடித்து விரட்ட வேண்டும் பாப்பா (கொக்கு)

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.