74 கவி கா.மு.ஷெரீப்

கவி கா.மு.ஷெரீப்

தமிழ் திரை உலகில் பல கவிஞர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களில் பலர் இன்றும் நமது நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது பல பாடல்கள் நமது நெஞ்சங்களில் ஆழப்பதிந்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. தங்களது கவித்துவம் வெளிப்பட வேண்டும், திரையுலகின் மூலம் தங்களது பெயரும் புகழும் வெளி உலகில் பரவ வேண்டும் என்பதோடு, வாழ்க்கைக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது என்பதற்காக இவர்கள் இந்தத் துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட பல கலைஞர்கள், கவிஞர்கள் நமது நாடக மேடைகளிலிருந்து தான் தமிழ்த்திரை உலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கம்பதாசன், பாபநாசம் சிவன், வாலி, நா.காமராஜ், நா.முத்துக்குமார், கு.மா.பாலசுப்பிரமணியன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் தவிர இன்று பெரும் புகழ் பெற்று விளங்கும் பல இளைய தலைமுறை கவிஞர்களும் அடங்குவார்கள்.

நூறு ஆண்டுகள் ஆனபின்பும் இவர்களது பல பாடல்கள் அன்றும் பாடப்பட்டுக் கொண்டிருக்கும், அத்தகைய அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் பல. இவர்களது கவிதைகளை இசை அமைத்து கேட்டு இன்புறும் வண்ணம் இசை அமைத்துக் கொடுத்த அமரத்துவம் வாய்ந்த இசை இயக்குனர்களைத்தான் மறக்கமுடியுமா? சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்டராமன், ஜி.ராமநாத ஐயர், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வேதா போன்ற பலர் என்றும் நிலைத்திருக்கும் பாடல்களை இசை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம் எம்.ஏ.வி.பிக்சர்ஸ், ஏ.பி.நாகராஜன் அவர்களின் படங்கள் இவைகளில் எல்லாம் அதிகமாகப் பாடல்களை இயற்றியவர் கவி.கா.மு.ஷெரீப். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல. நல்லதொரு தேசிய வாதி. காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தேச விடுதலைப் போரிலும் ஈடுபாடு கொண்டவர். காங்கிரசில் தமிழ் மொழிபால் ஆர்வம் கொண்ட பலர் அன்று தமிழ்நாட்டில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் தொண்டர்களாகத்தான் இருந்து வந்தார்கள். அவர்களில் கவி.கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி இவர்களைச் சொல்லலாம்.

கவி.கா.மு.ஷெரீப் அன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் எனும் சிற்றூரில் பிறந்தவர்.இவர் 11–8–1914இல் பிறந்தார். 1973 அக்டோபர் 10ஆம் தேதி காலமானார். தஞ்சை மாவட்டக் காரரான இவருக்கு தேசியமும், மொழியும் இரு கண்களாக இருந்தன. சின்ன வயதில் மற்ற திரைத்துறை கவிஞர்களைப் போலவே இவரும் பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார். பின்னர் இவரது பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெறலாயின. அப்படிப் புகழ் பெற்ற பாடல்களின் வரிசை மிகப் பெரிது. முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகிதான் பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது.

எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் சேலத்தில் தயாரான டவுன் பஸ் எனும் படத்தில் பாடப்பட்ட “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த “மாங்கல்யம்” படத்தில் வந்த “பொன்னான வாழ்வு மண்ணாகலமா?” என்கிற சோகப் பாட்டு. “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்ற பாட்டு “பணம் பந்தியிலே” படத்தில். சிவகாமி எனும் படத்தில் “வானில் முழு மதியைக் கண்டேன்” என்ற பாடல். ஏ.பி.நாகராஜனின் வெற்றிப் படமான “மக்களைப் பெற்ற மகராசி”யில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தில் வந்த “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?”, “அன்னையின் ஆணை”யில் வந்த “அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை”, எம்.ஏ.வி.பிக்சர்ஸ் “முதலாளி”யில் “குங்குமப் பொட்டுக்காரா, கோணக் கிராப்புக்காரா” பாடல், நான் பெற்ற செல்வத்தில் “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்” பாடல் இப்படி இவரது திரையுலகப் பாடல் பயணம் தொடர்ந்தது.

இந்தக் கால கட்டத்தில் இவரது அரசியல் மேடைப்பேச்சு, தமிழரசுக் கழகம், காங்கிரஸ் மேடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ம.பொ.சி.யின் நிழல் போல செயல்பட்ட இவரும் “தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற இதழ்களை நடத்தினார். ஜானிகான் ஜான் தெரு, தேனாம்பேட்டையில் இவரது அலுவலகம் அமைந்திருந்தது. பிரபலமான அரசியல் வாதியாகவும், திரைத்துரைப் பிரமுகராகவும் இவர் இருந்தார். இவர் இளமையில் திருவாரூரில் இருந்த சமயம் “ஒளி” எனும் பத்திரிகையை நடத்தி வந்தார். பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவரும் நாளில் இவரது சிபாரிசின் பேரில்தான் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்தார்.

இப்போது போல திரையுலகக் கவிஞர்களுக்கு அதிகம் பாட்டு எழுத வாய்ப்புக்கள் வராது. இவர் ஓர் ஆண்டுக்கு ஓரிரு பாடல்கள் மட்டும்தான் எழுதுவார். அப்படி எழுதுகின்ற பாடலுக்கும் அதிக நாட்களை இவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இசை அமைப்பாளர்கள் கவிஞர்களைத் தேடிப் பின் தொடர்ந்துகொண்டு இருப்பார்களாம் பாட்டு தயாராகிவிட்டதா என்று கேட்டுக் கொண்டு. இவரே அது பற்றி எழுதியிருக்கிறார். அதில் இவர் குறிப்பிடும் செய்தி, இசை அமைப்பாளர் இசையை வாசித்துக் காட்டும் போதே சில கவிஞர்கள் தூங்கிவிடுவார்களாம் என்பதும் ஒன்று.

இவரைப் பற்றிய மற்றொரு தகவல் திரையுலகில் பரவியிருந்தது. அது “சிவலீலா” எனும் நாடகத்துக்காக கவி.கா.மு.ஷெரீப் எழுதிய சில பாடல்களை ஏ.பி.நாகராஜன் தனது திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் எடுத்துக் கையாண்டார் என்பதுதான். அதன் முழு விவரமும் நமக்குத் தெரிய வரவில்லை. இவர் நிறைய அரசியல் கட்டுரைகள் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கவிதைகள் தவிர, கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இவருக்குத் தமிழ்நாடு அரசு 1972இல் கலைமாமணி விருதினை அளித்துக் கெளரவித்தது. இவர் எழுதிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். திரைத்துறையில் வாய்ப்பு குறைந்த பிறகு, அரசியலில் இருந்தும் ஓய்வு பெற்று இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தார். மிக உயர்ந்த குணங்களையும், தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் கொண்ட மிகச் சிறந்த ஆன்மிக வாதியாகவும் திகழ்ந்தவர் கவி.கா.மு.ஷெரீப். வாழ்க கவி.கா.மு.ஷெரீப்பின் புகழ்!

“தமிழ் முழக்கம்” கவி கா.மு.ஷெரீப்

(கலைமாமணி விக்கிரமன் அவர்கள் எழுதி “தினமணி” தமிழ்மணியில் வெளியான கட்டுரையிலிருந்து நன்றியுடன் வெளியிடப் படுகிறது)

கவி கா.மு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல் லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

கவி. கா.மு.ஷெரீப்பைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான் அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி கா.மு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டும் எழுதவில்லை. இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர். “எனக்கென எஞ்சி நின்றவை — புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று” என்றும், “புதிய தமிழகம் தோன்ற உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் கவி.கா.மு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைதவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது.

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள் என்று சிலம்பொலி செல்லப்பன் குறிப்பிடுகிறார்.

“சீறாப்புராணம்” சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்” என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.

“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக” என்று 1946ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939ஆம் ஆண்டில் “சந்திரோதயம்” என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். ‘அன்னையா? கன்னியா?’ என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956இல் ‘சாட்டை’ இதழில் எழுதினார். தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் ‘தமிழ் முரசு’ என அவர் எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால் ம.பொ.சி.யின் தமிழ் அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையைத் “தமிழகக் களக்கவினர்” என்று தன்னை அழைத்துக் கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார். திரு வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார், செய்வது போல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில் ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.

“மாயாவதி” என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். ‘பெண் தெய்வம்’, ‘புது யுகம்’ ஆகிய படங்கலுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியது போல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை ‘மச்சகந்தி’ என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.

இளங்கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீப்பின் பெயர் நின்று ஒலிக்கும்.
****

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.