70 “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்

“காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன் (1908 – 1985)

காந்தி ஆஸ்ரமம் திரு அ.கிருஷ்ணன் அவர்கள் 1908ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய கல்வி திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரை நடந்தது. இளம் வயதில் தேசிய உணர்வு ஏற்பட்ட காரணத்தால் அப்போது நடந்த பல தேசிய இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் பம்பாய் நகரில் இருந்த உறவினரிடம் வேலைக்காக அனுப்பப்பட்டார். அங்கு இவர் 1927 -29 ஆண்டுகளில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பம்பாய் பெரு நகரம் என்பதோடு இவருடைய தேசிய இயக்கத்தில் ஈடுபடவும் அங்கு இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. கதர் துணிகளை மொத்தமாக வாங்கி தோளில் சுமந்துகொண்டு விற்பனை செய்து தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். மகாத்மா காந்தியிடம் இவர் இந்தப் பணிக்காக பெற்ற பாராட்டை இவர் பெருமையாகக் கருதினார்.

பம்பாயிலிருந்து தமிழகம் திரும்பி விளாத்திகுளம் எனும் ஊரில் பொதுப்பணித்துறையில் மேஸ்திரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு இருந்த கதர் கடைக்கு இவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி அங்கு சென்ற போது கதர் கடையில் இருந்த ஒரு பத்திரிகை இவர் கண்களில் பட்டது. அது “விமோசனம்” எனும் பத்திரிகை. அது திருச்செங்கோடு நகரத்தில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட ‘காந்தி ஆசிரமத்தின்’ வெளியீடு. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உடனே அந்த பத்திரிகைக்கு சந்தா அனுப்பியதோடு கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்று அலுவலகத் தொடர்பினாலும், பொதுத்தொடர்பினாலும் பலரிடம் சந்தா வசூலித்து ‘விமோசனம்’ பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார். இவரது ஆர்வத்தையும், தேசபக்தியையும் கல்கி வெகுவாகப் பாராட்டி இவரை திருச்செங்கோடு வந்து தன்னைச் சந்திக்குமாறு கடிதம் எழுதினார்.

கல்கியின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணன் 1930இல் திருச்செங்கோடு சென்று அங்கு கல்கியைத் தேடினார். இவர் போனபோது கல்கி அங்கு இல்லை. பிறகு அவர் வந்தபின் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு ராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக திருச்சியிலிருந்து டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து நூறு தொண்டர்களுடன் பாதயாத்திரை சென்றார். இவருக்கும் அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள ஆசைதான். ஆனால் இவரை அப்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

அதுமுதல் ராஜாஜி கிருஷ்ணனின் ஆதர்ச தலைவர் ஆனார். சுதந்திரப் போரில் நடைபெற்ற பல போராட்டங்களில் இவர் பங்கு பெற்றார். 1932ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1933 வரை சுமார் ஒரு வருட காலம் சிறை தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ராஜாஜி தலைமையில் போராட்டத்தில் கைதாகி இரண்டாம் முறையாக சிறையில் இருந்தார்.

நாமக்கல்லில் இராமலிங்கம் பிள்ளையோடு போராட்டங்களில் கலந்து கொண்டு கொல்லிமலைப் பகுதிகளில் காவல்துறையின் கண்களில் படாமல் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தினார். அப்போது இவரோடு இருந்த பல தேசபக்தர்களுக்கு இராமலிங்கம் பிள்ளையின் சகோதரி மகன் இராமசாமி பிள்ளை (கரூர்) சைக்கிளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, பாத்திரங்கள் தெரியாமல் அதன் மீது வைக்கோலை வைத்துக் கொண்டு ரகசியமாகக் கொண்டு செல்வாராம். காந்தியத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்ட இவர் இளமை முதல் கதர் மட்டுமே அணிந்து வந்தார்.

1930 தொடங்க்கி 1970 வரை இவர் காந்தி ஆஸ்ரமப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1970இல் பணி நிறைவு பெற்று தன் பிள்ளைகள் பேராசிரியர் கி.கண்ணன், திரு கி.முத்துராமகிருஷ்ணன் ஆகியோரோடு வசித்து வரலானார். இவரது வாழ்க்கையில் இறைவன் விளையாடிவிட்டார். இவரது மூத்த மகனை இவர் 1977ஆம் ஆண்டில் பறிகொடுத்தார். புத்திர சோகம் இவர் மனதை ஆழமாகப் பாதித்திருந்தாலும் அதனை சிறிதுகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீதையின் வழிகாட்டுதல்படி நன்மை தீமைகளைச் சமமாகப் பாவித்துத் தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். மூத்த மகனை இழந்த பின் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் 1985இல்தான் இவர் மறைந்தார்.

திருச்செங்கோடு ஆசிரிமத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அதோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசிரமத்தில் இவர் நிர்வாகம் செய்த காலத்தில் இவருக்கு கதர் பணியில் ஈடுபாட்டோடு சிறப்பாகப் பணியாற்றினார். கதர் இயக்கத்தில் அப்போது தீவிரமாக இருந்த கோவை ஐயாமுத்து போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு இருந்தது. ஆசிரமத்தில் இராட்டையில் நூல் நூற்கவும், கதர் துணி தயாரிக்கவும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். 1940இல் இவர் நாகபுரிக்கருகில் இருந்த வார்தா காந்தி ஆசிரமம் சென்று அங்கு மகன்வாடி கிராமோத்யோக் வித்யாலயாவில் கையினால் காகிதம் செய்யும் முறையைக் கற்று வந்தார். திருச்செங்கோடு திரும்பி இங்கிருந்த தொண்டர்கள் பலருக்கும் கையினால் காகிதம் செய்யும் முறையைப் பயிற்றுவித்து எல்லோருக்கும் பயன்படும்படி கைத்தொழிலை வளர்த்தார்.

அப்போது திருச்செங்கோடு ஆசிரமத்தின் காதி பண்டார் எனும் கதர் கடையின் நிர்வாகியாக பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர் 1945இல் காலமான போது கிருஷ்ணன் அந்த பண்டாரின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் சுமார் இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். சேலத்தில் இப்போது உள்ள ‘ராஜாஜி காதி பவன்’ அன்று ஆசிரமத்தில் இருந்த காதி பண்டாரின் வளர்ந்த நிலைதான்.

தியாகி அ.கிருஷ்ணனுக்கு மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் அதிக ஈடுபாடும் பக்தியும் உண்டு. தன் மகன் ஒருவருக்கு இராமகிருஷ்ணன் என்று பெயரிட்டதே இந்தக் காரணம் தொட்டே. அன்றைய சேலம் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்து மேற்கண்ட மகாங்களைப் பற்றிய பெருமைகளைப் பரப்பியதோடு பல விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களை நல்ல குரல் வளத்தோடு இவர் பாடுவதைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது. உணர்ச்சி பூர்வமாக, பாடல்களின் கருத்துக்கேற்ப இவர் பாரதி பாடல்களைப் பாடிக் கேட்க பலரும் விரும்புவர். நல்ல இசை வளம், குரல் வளம் இவருக்கு உதவி புரிந்தது.

மூத்த மகனை இழந்து விட்டாலும், இவரது மற்ற இரு மகன்களிடமும், தன் மகளிடமும் அன்பு பூண்டு இவர் தனது மனைவியோடு இருந்து 1985இல் காலமானார். வாழ்க தியாகி ‘காந்தி ஆஸ்ரமம்’ அ.கிருஷ்ணன் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.