48 குமராண்டிபாளையம் நாச்சியப்பன்

மகாத்மா காந்தியடிகள் 1930க்குப் பிறகுதான் மதுவிலக்குக் கொள்கையை முன்வைத்து அகிம்சை வழியில் மறியல் முதலான போராட்டங்களை நடத்தினார். அதற்கு முந்தைய காலகட்டத்திலும் அன்றைய காங்கிரசார் மதுவிலக்கை ஓர் முக்கியமான கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஏழை எளிய உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பினால் கிடைத்த பணத்தையும், அதையும் மீறி, தங்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகளின் நகைகளையும், ஏன்? தாலியையும் கூட விற்றுக் குடித்து அழிந்து போனதைத் தடுத்து நிறுத்த எண்ணம் கொண்டனர் தியாக பாரம்பரியத்தில் வந்த அன்றைய காங்கிரசார். இந்த காலகட்டத்திற்கு முன்னதாகவே தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ராஜாஜி ஆரம்பித்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு ராஜாஜி மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்தார். அதற்காகவே “விமோசனம்” எனும் ஒரு பத்திரிகையும் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகை துறைக்கு வந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.

அன்று ஆசிரம தொண்டர்கள் பலர் மாட்டு வண்டிகளில் மதுவினால் விளையும் கேட்டினை விளக்கும் விளம்பரத் தட்டிகளை வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு காந்தி ஆசிரிம தொண்டர்களின் பிரச்சாரத்தின் பயனாக பொதுவாக மக்கள் மதுவின் கேட்டினைப் புரிந்துகொண்டு சிறிது சிறிதாக அதனை விலக்கத் தொடங்கினர். திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் ஆகிய மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரத்துக்குப் பரிபூரண வெற்றிகிடைத்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றைய கலால் இலாகா இயக்குனராக இருந்த ஆங்கிலேயர் ஈ.பி.கார்ட்டர் என்பவர் நேரில் வந்து ஆய்வு செய்து இங்கெல்லாம் மதுவிலக்கு வெற்றிகரமாக நடைபெறுவதைக் கண்டு வியந்து திருச்செங்கோடு ஆசிரமத்தின் பார்வையாளர் புத்தகத்தில் பாராட்டி எழுதினார். பூரண மதுவிலக்கு ஏற்படுமானால், அடிமட்ட மக்களின் வாழ்க்கை மேம்படுவதோடு, அமைதியும், ஒழுக்கமும் மக்கள் மத்தில் நிலவும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

மகாத்மா காந்தியடிகள் இந்த மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்கு சட்டத்தினால் கொண்டுவரப்படாமல், தொண்டர்களின் சாத்வீக தொண்டினால் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பகுதிகளில் எங்காவது கள்ளுக்கடை திறந்திருப்பது தெரிந்தால் அவ்வூர் மக்களே சென்று அதனை மூடவைத்தனர். கள் இறக்கப்படாமலும் பார்த்துக் கொண்டனர். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த சூழ்நிலையில், எங்கும் எப்போதும் பலர் நேர்வழியில் சென்றால் யாராவது ஒருவர் குறுக்கு வழி தேடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவன் கள்ளத் தனமாக சாராயம் காய்ச்சத் தொடங்கினான். இது 1930க்கு முந்தைய நிலை. இன்றைய நிலையை எண்ணிப் பார்க்காதீர்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கள்ளச் சாராயமும், அரசாங்க சாராயமும் ஆறாக ஓடுவதை நாம் காணலாம். இந்தத் திருட்டுத் தனத்தை நாச்சியப்பன் எனும் ஒரு தேசபக்தன், காந்திய தொண்டன் போலீசுக்குத் தகவல் கொடுத்தான். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டான். அது அன்றைய நிலை. அவன் சிறைவாசம் முடிந்து ஊர் திரும்பியதும் முதல் வேலையாகத் தன்னைப் பற்றி போலீசுக்குத் தகவல் கொடுத்த குமராண்டிபாளையம் நாச்சியப்பனைத் தேடிப் பிடித்து அவனை அடித்துத் துன்புறுத்தி, அவன் இரண்டு கண்களிலும் பார்வை இழக்கச் செய்தபின் ஊரைவிட்டு ஓடிவிட்டான். பாவம் நாச்சியப்பன், கண்கள் குருடானான். நல்ல காரியம் செய்த பாவத்துக்காக!

இந்தச் செய்தி திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்த ராஜாஜியை எட்டியது. அவர் உடனே நாச்சியனை ஆசிரமத்துக்கு அழைத்து வந்து அவனுக்கு சிகிச்சை அளிக்க உதவினார். அவன் கண்களின் புண்கள் குணமடைந்த பின் அவனுக்கு ராட்டையில் நூல் நூற்கக் கற்றுத் தந்தார். அவன் நூற்கும் நூலுக்கு மட்டும் மற்றவர் நூற்கும் நூலுக்குக் கொடுக்கும் தொகையைவிட இரட்டிப்பாக வழங்கி வந்தார். அப்போதெல்லாம் காங்கிரஸ் பொருட்காட்சி நடத்துவது வழக்கம். அங்கெல்லாம் இரு கண்கள் இல்லாத நாச்சியப்பன் நூல் நூற்பதை மக்களுக்குக் காட்டி, அவனது மேன்மையை விளக்கி வந்தார். அந்த நாச்சியப்பனுக்கு ஆசிரமம் ஓய்வு ஊதியம் வழங்கி எந்தக் குறையுமின்றி காப்பாற்றி வந்தது.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமும் ராஜாஜியும் கண்களை இழந்த நாச்சியப்பனுக்கு ஆதரவாக இருந்து வந்தது போல, மேலும் பல தியாகிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. வாழ்க மதுவிலக்குக் கொள்கைக்காக தன்னிரு கண்களையிழந்த தியாகி நாச்சியப்பன் புகழ் வாழ்க!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.