60 கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி

அமரர் சுப்பிரமணிய சிவா ஒரு சந்நியாசியைப் போல காவி உடை அணிந்து நாட்டுக்காகப் பாடுபட்டு வந்தவர். சிறையில் அவர் பட்ட கொடுமைகளின் காரணமாக தொழுநோய் தொற்றிக் கொள்ள வாழ்நாளெல்லாம் தொழுநோயோடு போராடி மரணமடைந்தவர். அப்படி அவர் வாழ்ந்த நாட்களில் அவருக்கு பல தொண்டர்கள் அமைந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.பி.வி.அழகர்சாமியும். குருநாதர் சிவாவிடம் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். இவரது மிக இளம் வயது முதற்கொண்டு நாட்டுக்காக உழைக்க உறுதி எடுத்துக் கொண்டார்.

வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் பண்ணைக்காடு எனும் ஊர். இங்குதான் இவர் தனது மர வியாபாரத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார். 1931இல் அவ்வூரில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி மக்களுக்குப் பணியாற்றி வந்தார். இவரது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கொடைக்கானல் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகவும் பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் காலத்தில் அங்கு இவர் பல மகாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் விவசாயப் பிரிவில் பணியாற்றி, விவசாயிகளுக்காக பாடுபட்டு அவர்களை காங்கிரசில் அங்கம் வகிக்கச் செய்தார்.

1937இல் ஒரு தேர்தல் நடைபெற்றது. அப்போதெல்லாம் கட்சிகளுக்குச் சின்னங்கள் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குப் பெட்டிகள். காங்கிரசுக்கு மஞ்சள் நிறப் பெட்டி. ஆகையால் ‘மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்’ என்று வாக்குக் கேட்பார்கள். அழகர்சாமி கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கெல்லாம் சென்று, மக்களிடம் மஞ்சள் பெட்டிக்கு ஆதரவு திரட்டி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார்.

வத்தலகுண்டுவில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் மாநாட்டுக்காக இவர் மிகவும் பாடுபட்டார். மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு, கொடைக்கானல் பகுதியிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மாநாட்டில் இவரது பணியை தலைவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

1941இல் தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியது. இவர் கொடைக்கானல் பகுதியிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார். அங்கெல்லாம் இவரைக் கைது செய்யவில்லை. எனவே இவர் கும்பகோணம் கிளம்பிச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப 1-3-1941இல் அங்கு கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்குக் கொண்டு சென்று ஆறு நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து கிளம்பி திருவையாறு சென்று அங்கு 12-3-1941இல் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து அதற்காக 15 நாட்கள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையாகி மறுபடியும் கும்பகோணம் சென்று 4-4-1941இல் அங்கு மறியல் செய்து கைதானார். இம்முறை தஞ்சாவூர் மாஜிஸ்டிரேட் இவருக்கு இரண்டு மாத தண்டனை விதித்தார். தண்டனைக்காலத்தை திருச்சி சிறையில் அனுபவித்தார்.

மறுபடியும் கொடைக்கானல் பகுதியில் இவரது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு ஜுலை 1941இல் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். அதோடு அபராதமும் சிறையில் பி வகுப்பும் கொடுக்கப்பட்டது. அதுமுதல் இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக விளங்கி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாலும், இவர் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. தொண்டராகவே கடைசி வரை இருந்த தியாகி அழகர்சாமி. வாழ்க அழகர்சாமி புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.