52 கோவை அ. அய்யாமுத்து

தமிழக அரசியலில் இருவேறு துருவங்களாக மின்னிய ராஜாஜி, பெரியார் ஈ.வே.ரா. ஆகிய இருவரிடமும் நட்பு பாராட்டி அரசியலிலும், கதர் அபிவிருத்திப் பணியிலும் ஈடுபட்ட ஒரு தலைசிறந்த தேசபக்தர் கோவை அ.அய்யாமுத்து. இவரைப் பற்றிய ஒரு தவறான செய்தியை யாரோ சிலர் மகாத்மா காந்தியடிகளிடம் சொல்லிவிட, அவரும் அதை உண்மை என்று நம்பி தன் பத்திரிகையில் இவரைக் கண்டித்துவிட, இவரோ நேரே காந்தியடிகளிடம் சென்று அவரது தவறைச்சுட்டிக் காட்டி அதனை அவர் திருத்திக்கொள்ளும்படி செய்த அகிம்சை வழி போராளி இவர். அவரைப் பற்றி இந்த சிறு கட்டுரையில் பார்ப்போம்.

பால கங்காதர திலகரின் கால்த்துக்குப் பிறகு இந்திய சுதந்திரப் போர் காந்திஜியின் தலைமையில், அகிம்சை வழி அறப்போராட்டமாக நடைபெற்றது. அப்படிப்பட்ட அகிம்சை வழிப் படையில் இருந்தவர் அய்யாமுத்து. இவருடைய சுதேசிப் பற்றும், காந்திய வழிமுறைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையும், கடின உழைப்பும், நேர்மை தவறாத இவரது பண்பும் இவர் மீது ராஜாஜியை அன்பு கொள்ளச் செய்தது.

காந்திஜி 1921ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு வருகை புரிந்தார். அன்றைய கோவை மாநகரம் அவருக்கு அளித்த வரவேற்பில் அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் காந்திஜி அவர்களை கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்குங்கள், கதர் துணிகளையே அணியுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கோவை அய்யாமுத்து அன்று முதல் தன் வாழ்வை கதர் பணிக்கே அர்ப்பணித்துக் கொண்டார்.

அதுவரை அன்னிய ஆடைகள் விற்பனை செய்த ரோவர் அண் கோ எனும் நிறுவனத்தை நடத்தி வந்தவர், அந்த வியாபாரத்தை நிறுத்தி விட்டு ரங்கூன் நகருக்குச் சென்றார். அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் கோவை வந்த அவர் கதராடை அணிந்து, கதர் வியாபாரியாகத் திரும்பி வந்தார். கோவை மாவட்டத்தில் பரஞ்சேர்வழி எனும் கிராமம் இவரது பூர்வீக ஊர். இவரது தந்தையார் அங்கண்ண கவுண்டர், தாய் மாராக்காள். இவர் 1898இல் பிறந்தவர்.

கோவையில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். அப்போதே ஆங்கிலத்தில் நல்ல அனுபவம் இருந்தது. நன்கு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் புலமை பெற்றார். முதலில் இவர் ஸ்பென்சர் கம்பெனி உட்பட பல வேலைகளில் இருந்தார். இவர் இளமைப் பருவத்தில் 1914இல் முதல் உலகப் போர் தொடங்கியது. இவர் யுத்தத்தில் சேர்ந்து போரிட விரும்பினார். 1918இல் ராணுவத்தில் சேர்ந்து இப்போதை ஈராக்கில் பணியாற்றினார். ஊர் திரும்பிய பின் 1921இல் கோவிந்தம்மாளை இவர் திருமணம் செய்து கொண்டார்.

இவரைப் போலவே இவரது மனைவியும் கதர் தொண்டர். ராட்டையில் நூல் நூற்பதை ஒரு வேள்வியாக நடத்தி வந்தார். அய்யாமுத்து கிராமங்கள் தோறும் பயணம் செய்து சுதந்திரப் பிரச்சாரமும், கதர்த் தொண்டும் செய்து வரலானார். ஆங்காங்கே ராட்டையில் நூல் நூற்பவர்களுடைய நூல்களை வாங்கி திருப்பூர் காதி வஸ்த்திராலயத்துக்கு அனுப்பி வந்தார். இவரே கோவையில் ஒரு கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார். அந்த சமயம் திருப்பூர் கதர் போர்டின் தலைவர் காங்கிரசிலிருந்த பெரியார் ஈ.வே.ரா. அவருடன் அய்யாமுத்துவுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

அந்த சமயம் இப்போதைய கேரளத்திலுள்ள வைக்கம் எனும் ஊரில் தீண்டாமை கடுமையாக நிலவி வந்தது. அங்குள்ள ஆலயத்தைச்சுற்றி நான்கு தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது. இதனை எதிர்த்து கேரளத்தின் சர்வோதயத் தலைவர் கேளப்பான், கே.பி.கேசவ மேனன் ஆகியோர் சத்தியாக்கிரகம் செய்தனர். தமிழக மக்கள் சார்பில் பெரியார் ஈ.வே.ரா.வும் அய்யாமுத்துவும் அங்கு சென்று கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அய்யாமுத்துவுக்கு ஒரு மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இவர் விடுதலையாகி சிறையிலிருந்து வெளி வந்தபோது இவரை வரவேற்றவர் ராஜாஜி.

திருச்செங்கோட்டில் பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் எனும் ஜமீந்தார் கொடுத்த நிலத்தில் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அய்யாமுத்து பெரும்பாடுபட்டு கட்டடங்களை உருவாக்கத் துணை புரிந்தார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ராட்டையில் நூல் நூற்க வேண்டும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியும் ராட்டை நூல் நூற்கும் பயிற்சியும் தர்ப்பட்டது. தீவிரமாக மதுவிலக்குப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ராஜாஜியும் க.சந்தானமும் தங்கள் குடும்பத்தோடு ஆசிரமத்தில் குடியேறினர். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் இங்கு வந்து ‘விமோசனம்’ எனும் மதுவிலக்குப் பிரச்சார பத்திரிகையின் ஆசிரியரானார்.

அந்த காலத்தில் ஆண்டுதோறும் காங்கிரஸ் இயக்கத்தின் ஆண்டு மாநாடு பல ஊர்களிலும் நடைபெறும். அங்கெல்லாம் அய்யாமுத்து சென்று வந்தார். அப்படி அவர் சென்ற காங்கிரஸ் மாநாடுகள் பெல்காம், லாஹூர், கராச்சி, லக்னோ, ராம்கர், ஹரிபுரா, நாசிக், ஆவடி என்று தொடர்ச்சியாக இவர் மாநாடுகளுக்குச் சென்று வந்தார். ஊர் ஊராகச் சென்று கிராம மக்களை கதர் நூற்கவும், கதர் உடைகளை அணியவும், நூற்ற நூலை திருப்பூர் காதி வஸ்த்திராலயத்தில் கொடுத்து துணியாக வாங்கி அணியவும் பழக்கப்படுத்தினார். ஆண்டில் பெரும் பகுதி இவர் இதுபோன்ற கதர் பிரச்சார் சுற்றுப்பயண்த்தில்தான் கழித்தார். இவரால் கதர் உற்பத்தி அதிகரித்தது. கிராமங்களில் நூல் நூற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. கதர் என்றால் அய்யாமுத்து என்று ராஜாஜி இவரைப் பாராட்டினார். இவர் காலத்தில் கதர்த் தொழில் உச்ச கட்டத்தை அடைந்தது. திருப்பூர் காதி வஸ்த்திராலயமும் அதிக லாபம் பெற்றது.

1936இல் இவர் தமிழ்நாடு சர்க்கா சங்கத்தின் செயலாளர் ஆனார். அகில பாரத சர்க்கா சங்கத்தின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக இவர் தன் பதவியை ராஜிநாமா செய்தார். ராஜாஜி தலையிட்டு இவரை வார்தா சென்று காந்திஜியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்டபடி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து, காந்திஜி கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ளச் செய்தார். அப்போது காந்திஜி தனது அகில இந்திய சர்க்கா சங்க தலைவர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அய்யாமுத்துவிடம் தந்தார். அதைப் பெற்றுக் கொள்ளாமல் அய்யாமுத்து காந்திஜியிடம் “இதை ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள், உங்களைப் படைத்த கடவுளிடம் கொடுங்கள் என்றார்”. இத்தோடு பிரச்சினை முடிவுக்கு வந்து அய்யாமுத்து மீண்டும் ஊர் திரும்பி கதர் பணிகளைக் கவனிக்கலானார்.

இதன் பிறகும் கூட அய்யாமுத்துவின் எதிரிகள் இவரைப் பற்றி பல பொய்யான குற்றச்சாட்டுகளை காந்திஜியிடம் கொண்டு சென்றனர். அவை அனைத்தும் பொய் என்று பிசுபிசுத்துப் போயிற்று. 1932இல் இவர் புஞ்சை புளியம்பட்டியில் போலீஸ் தடியடியில் காயமடைந்தார். ஆறு மாதம் வேலூர் சிறையில் கிடந்தார். மறுபடியும் ஒரு ஆறுமாதம் சிறையும் ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். இந்த சிறைவாசம் கோவை சிறையில். இதோடு முன்னர் 1931இல் சாத்தான்குளத்தில் பேசிய பேச்சுக்காக மற்றொரு ஆறுமாத சிறை தண்டனையும் ஒருமிக்க அனுபவிக்க வேண்டியதாயிற்று. ராஜாஜியிடம் எந்த அளவு மரியாதை இருந்திருந்தால் இவர் “ராஜாஜி என் தந்தை” என்று ஒரு நூலை எழுதியிருப்பார். 1960இல் இவர் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியில் சேர்ந்து பின் 1966இல் அதிலிருந்து வெளியேறினார்.

அதே அளவு நட்பும் உரிமையும் பெரியாரிடமும் அவருக்கு இருந்தது. பெரியாருடைய ‘குடியரசு’ பத்திரிகையை ஈரோட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளியிட அய்யாமுத்துவை பெரியார் பணித்தார். அப்படியே செய்த அய்யாமுத்து விற்பனையை பலமடங்கு உயர்த்திக் காட்டினார். அவரோடு ஏற்பட்ட ஒரு பிணக்கின் காரணமாக அதைவிட்டு விலகினார். இந்திய சுதந்திர தினத்தி 1947இல் இவர் தான் வசித்த புஞ்சை புளியம்பட்டியில் எளிமையாகக் கொண்டாடினார். வாழ்வையே நாட்டுக்கும், கதர் தொழிலுக்கும், இந்திய சுதந்திரத்துக்கும் அர்ப்பணித்த இந்த அற்புத தம்பதியரின் தியாக வாழ்க்கை போற்றுதலுக்குரியதாகும். வாழ்க கோவை அய்யாமுத்து புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.