31 சீர்காழி சுப்பராயன்

1942இல் நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகளில் சீர்காழி உப்பனாற்று பாலத்துக்கு வெடி வைத்த சதி வழக்கு முக்கியமானது. இந்தப் போராட்டம் முழுவதும் வெற்றி பெறவில்லையாயினும், இதில் ஈடுபட்ட சுதந்திரப் போர் வீரர்களை பிரிட்டிஷ் அரசு மிகக் கடுமையாக தண்டித்தது. இதில் குற்றவாளிகளாக அப்போது பிரபலமாக இருந்த பலர் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் முதன்மையானவர் சீர்காழி ரகுபதி ஐயரின் குமாரர் சுப்பராயன் என்பவராவார். மற்ற பிரபலங்கள் குறிப்பாக தினமணி நாளிதழில் பணியாற்றி வந்த ஏ.என்.சிவராமன், ராமரத்தினம், டி.வி.கணேசன், கும்பகோணம் நகர காங்கிரஸ் தலைவர் பந்துலு ஐயரின் குமாரர் சேஷு ஐயர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

சுப்பராயனின் தந்தையார் குன்னம் ரகுபதி ஐயர் நூற்றுக்கணக்கான வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர். ஐந்தாறு கிராமங்கள் இவர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தது. இவர் தயாள குணமும், தன்னை அண்டியவர்களை அரவணைத்து ஆதரிக்கும் பண்பு பெற்றவர். தான் பெரிய நிலப்பிரபு என்பதற்காக மற்றவர்களை எளிதாக எண்ணக்கூடியவர் அல்ல. இவர் வீட்டுக் கதவு விருந்தாளிகளுக்கு உணவு படைக்க எப்போதும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தோன்றிய சுப்பராயன் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூன் கொண்டு சாப்பிடும் வசதி படைத்தவர். இவர் குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொண்டவர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள், தலை சிறந்த உத்தியோகஸ்தர்கள். அப்படிப்பட்ட தயாள குணமும், இரக்க குணமும் கொண்ட ரகுபதி ஐயரின் குமாரன் சுப்பராயன் தேசபக்தி காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று, வெளியே வர வாய்ப்பிருந்தும், பிடிவாதமாக சிறைவாசத்தை முடித்தே வெளிவருவேன் என்று நாட்டுக்காகத் தன்னை வருத்திக் கொண்ட மாபெரும் தியாகி. இன்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டாவது வெளியே வரத்துடிக்கும் அரசியல் வாதிகளோடு இத்தகைய தியாக உள்ளம் கொண்டு சுப்பராயனை என்னவென்று சொல்லுவது?

1942இல் பம்பாய் காங்கிரஸ் மாநாடு முடிந்த அன்றே மகாத்மா காந்தி அடிகள் முதலான அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு பாதுகாப்புக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது. காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. நாட்டின் பலபாகங்களிலும் வன்முறையும், தீ வைத்தல், தந்தி கம்பி அறுத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் கலவரமும், தீ வைப்பும் நடந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட தேசபக்தர்கள் சிலர் ஒன்றுகூடி, பிரிட்டிஷ் அரசாங்கம் போராட்டத்தின் கடுமையை உணரும் வண்ணம் சென்னை மாயவரம் இடையே ரயில் தண்டவாளத்தைப் பெயர்த்து அல்லது வெடி வைத்துத் தகர்க்க முடிவு செய்தனர். அதை செயல்படுத்துவதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா ஒரிசா ஆந்திரா எல்லையிலுள்ள சுரங்கத்திலிருந்து வெடிமருந்து குச்சிகளை வாங்கி வந்தார். பல மாவட்டங்களுக்கும் இந்த வெடிப் பொருட்கள் ராமரத்தினம் மூலம் அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கான வெடிகள் கும்பகோணம் பந்துலு ஐயரின் புதல்வரும், தினமணி உதவி ஆசிரியருமான டி.வி.கணேசன், அவரது சகோதரர் சேஷு ஐயர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்த ஊர் பாபநாசம் அருகிலுள்ள திருக்கருகாவூர். இந்தப் பகுதியில் எங்கு வன்முறை நடந்தாலும் அது டி.வி.கணேசன் மீதுதான் விழும் என்பதால் இவர்கள் மாயவரம் அருகே ரயில் பாதையில் வெடி வைத்துத் தகர்க்க சீர்காழி உப்பனாறு பாலம்தான் சரியான இடம் என்று முடிவு செய்து, அந்தப் பகுதியில் இளமையும், ஆர்வமும், தேசபக்தியும் உள்ள சீர்காழியைச் சேர்ந்த சுப்பராயனைப் பார்த்துப் பேசினர். அவரும் தன் நண்பர்களுடன் இந்தக் காரியத்தை முடிப்பதாகச் சொல்லி வெடிகளை வாங்கிக் கொண்டார்.

சுப்பராயனும் அவரது நண்பர்களும் சீர்காழி ரயில் நிலையம் அருகேயுள்ள உப்பனாறு பாலத்தில் வெடி வைக்க எல்லா வேலைகளையும் செய்யலாயினர். பாலத்துக்கு அடியில் துளை போட்டு, வெடிகளை அதில் பொருத்தி, திரி தண்ணீரில் படாமல் கம்பி வைத்துக் கட்டி, தீ வைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து மறைந்து கொண்டனர். அப்போது அந்த வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பார்ட்டியின் கண்களில் எரியும் திரி பட்டுவிட்டது. உடனே அவர்கள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து விட்டனர். போலீஸ் விசாரணையில் இந்தக் காரியத்தைச் செய்யக்கூடியவர் சுப்பராயனாகத்தான் இருக்க முடியும் என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் நண்பர்களும் கைதாயினர். பிறகு தினமணி சிவராமன், ராமரத்தினம், சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோர் கைதாகினர். வழக்கு நடந்தது. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர்கள் அனைவரும் விசேஷ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். முதலில் சேஷு ஐயர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். முடிவில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் டி.வி.கணேசனும் விடுவிக்கப்பட்டனர். தினமணி ராமரத்தினத்துக்கு ஏழு ஆண்டுகளும், சீர்காழி சுப்பராயனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் பலருக்கு வெவ்வேறு தண்டனைகளுக் அளிக்கப்பட்டது. சுப்பராயன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்பராயன் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாதலால், இவரது தந்தை மகனை எப்படியாவது வெளியில் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சுப்பராயன் அப்படிப்பட்ட எந்த முயற்சிக்கும் இடமளிக்கவில்லை. சிறை தண்டனையை அனுபவிப்பேன் என்று உறுதியோடு இருந்தார். பின்னர் ஆந்திர கேசரி டி.பிரகாசம் சென்னை மாகாண பிரதமராக பதவி ஏற்று பொது விடுதலை செய்தபோது பல ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பிறகு சுப்பராயன் விடுதலையானார். விடுதலையான பிறகு திருச்சிக்குச் சென்று அங்கு சிம்கோ மீட்டர்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி, பெரும் தொழிலதிபரானார். தானொரு நிலப்பிரபு என்பதோ அல்லது பெரும் தொழிலதிபர் என்பதோ இவரது நடத்தையில் தெரிந்து கொள்ள முடியாது. மிகச் சாதாரண முரட்டுக் கதர் கட்டும் இவர், எவ்வளவு எளியவரானாலும், பழைய நண்பர்களை, உறவினர்களை, தியாகிகளை நேரில் கண்டுவிட்டால் அவர்களோடு பேசி, சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, தான் ஒரு பெரிய மனிதர்தான் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறார்.

எந்த வசதியும் இல்லாதவர்கள்கூட பதவிக்கு ஆலாய் பறப்பதும், பதவி கிடைத்ததும் பழைய நிலைமையை மறப்பதும், தலை கனம் கொண்டு அலைவதும் சகஜமாக உள்ள இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு தியாகியா? ஆம். சீர்காழி சுப்பராயனைப் பாருங்கள். அவர்தான் ஓர் உதாரண புருஷர். வாழ்க தியாகி சுப்பராயன் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.