49 சேலம் A.சுப்பிரமணியம்

இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு கட்டங்களாகப் பிரிந்து நடந்தன. 1885 முதல் 1906 வரையிலான காங்கிரஸ் வரலாறு பிரிட்டிஷ் அரசுக்கு மனுச்செய்து, வேண்டுகோள் விடுத்து, காங்கிரஸ் மாநாடுகளுக்கு பிரிட்டிஷ் வைஸ்ராய், கவர்னர்கள் ஆகியோரை அழைத்து கெளரவித்து நடத்தப்பட்டன. 1906க்குப் பிறகு பால கங்காதர திலகரின் காலம்தான் முதன் முதலாக பரிபூர்ண சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட காலம். ‘சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்’ என்பது திலகரின் குறிக்கோள். அவரது சீடர்களாக தமிழகத்தில் பலர் இருந்தனர். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் திலகரின் தொண்டர்கள்.

அவரது மறைவுக்குப் பின் காந்தி சகாப்தம் தொடங்கியது. அவரது காலத்தில் 1919இல் பிரிட்டிஷ் அரசாங்கம் ‘ரெளலட் சட்டம்’ எனும் ஓர் அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தியாவில் சுதந்திரம் என்று வாயைத் திறப்போர்க்கு கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர கொண்டுவரப்பட்ட சட்டம் இந்த ரெளலட் சட்டம். இந்த அராஜக சட்டத்தை எதிர்த்து காந்திஜி குரல் கொடுத்தார். நாடு முழுவதும் எதிர்ப்பு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று எங்கும் அமளி ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை எதிர்த்து அங்கெல்லாம் குரல் எழுப்பப்பட்டது.

நாடு முழுவதும் நடந்த ரெளலட் சட்ட எதிர்ப்பு சேலம் நகரிலும் நடந்தது. அதற்காக சேலத்தில் நடந்த ஒரு ஊர்வலத்துக்கு பூபதி என்பவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். அப்போது சேலத்தில் பள்ளிக்கூடமொன்றில் படித்து வந்த ஏ.சுப்பிரமணியம் எனும் சிறுவன் இந்த ஊர்வலம் குறித்து வீதி வீதியாகச்சென்று மக்களுக்கு அறிவித்து ஊர்வலம் வெற்றி பெற உழைத்தான். மாணவப் பருவத்தில் தொடங்கிய சுப்பிரமணியனின் தேசபக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேலத்துக்கு வந்து பேசும் பெரும் தலைவர்கள் கூட்டத்துக்கெல்லாம் சென்று அவர்கள் சொற்பொழிவைக் கேட்டு தேசாவேசம் கொள்ளலானான். ஒவ்வொரு கூட்டத்திலும் முன்னால் நின்று “வந்தேமாதரம்” “பாரதமாதாகி ஜே” என்று கோஷமிடுவார். இப்படி தேச சேவையில் ஈடுபட்டிருந்தாலும் காந்திஜியின் கொள்கைகளைக் காட்டிலும் வன்முறை வழியே இவருக்குச் சரி என்று தோன்றியது. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் அசையும் என்பது இவரது கருத்து.

1922ஆம் ஆண்டு. இங்கிலாந்தின் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். சென்னைக்கும் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸின் பெரும் தலைவராக இருந்த ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் ஓர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் ஏ.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடியில் இவருக்கு அடிபட்டு தலை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஆற பலநாள் ஆனபோதும், இவரது வஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

மகாத்மா காந்தி 1927இல் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது இளைஞர்கள், மாணவர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். அப்போது இவர் காந்திஜியிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். காந்திஜியின் வழிமுறைகள் இவருக்குச் சரியாகப் படவில்லை. இப்படியெல்லாம் போராடினாலா வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போவான். ஆனால் இந்த வீரமிக்க இளைஞர்களின் கோபத்தீயைத் தன் அறிவார்ந்த உரைகளால் காந்திஜி சமப்படுத்தி, அவர்களையும் காந்திஜியின் அகிம்சை வழிக்குக் கொண்டு வந்தார். ஏ.சுப்பிரமணியமும் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவராக மாறினார்.

1930 மார்ச்சில் மகாத்மா காந்தி சபர்மதியிலிருந்து தண்டி வரை உப்பு சத்தியாக்கிரக யாத்திரை தொடங்கினார். தெற்கே அவரது மனச்சாட்சியாக விளங்கிய ராஜாஜி இங்குமொன்று உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை திருச்சியிலிருந்து தொடங்கி வேதாரண்யத்தில் முடித்தார். இந்த சென்னை ராஜதானியின் தலைநகரில் நடக்காமல் எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த இந்தப் போர் போலவே, சென்னையின் முக்கியப் பகுதியிலும் ஓர் உப்பு சத்தியாக்கிரகத்தை துர்க்காபாய் தேஷ்முக் தலைமையில் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை கோட்டையின் முன் உப்பு காய்ச்சுவதற்காக அணிவகுத்துச் செல்லலாயினர். அதில் ஏ.சுப்பிரமணியமும் தொண்டர்களில் வழிநடத்திச் செல்லும் தலைவராகச் சென்றார்.

இந்த ஊர்வலம் போலீசாரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டது. அடித்து, உதைத்து, கண்மண் தெரியாமல் துகைத்து, இவர்களை நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்ற கொடுமை நடந்தது. 40க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பலத்த காயமடைந்தனர். தியாகி ஜமதக்கினி நாயக்கர், திருவேங்கட நாயக்கர், திருவாங்கூர் தம்பி, சேலம் ஏ.சுப்பிரமணியம் ஆகியவர்கல் சுயநினைவு இழந்து கிடந்தனர். அடிபட்ட தியாகிகளை துர்க்காபாய் தேஷ்முக் தனது வேனில் ஏற்றிக்கொண்டு சென்று டாக்டர் ராமாராவ் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். உடல் நலம் தேறியதும் சேலம் சென்று, மீண்டும் சென்னை வந்து சூளையில் நடந்த மறியலில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்தார்.

மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்த இவர் மீது கள்ளுக்கடை முதலாளிகளுக்குக் காண்டு. இவரை எப்படியும் ஒழித்துவிட வேண்டுமென்று சமயம் பார்த்திருந்தனர். ஒரு நாள் இவர் ஏமாந்த சமயம் இவரை அடியாட்கள் கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் ஒரு சோளக்காட்டில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். இவரது சேவை தேவை என்றோ என்னவோ, பாரதமாதா இவரைக் காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்து விட்டாள். இது போதாதென்று இவர் மீது பொய்வழக்கு ஒன்று போட்டு இவரை மீண்டும் ஓராண்டு சிறைக்கு அனுப்பினர் ஆட்சியாளர்கள்.

1940இல் காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம் அறிவித்தார். இவர் சேலத்தை விட்டு தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டார். இப்போது அவருக்குக் கிடைத்த தண்டனை 16 மாத கடுங்காவல் சிறை. இவர் பலமுறை சிறை சென்று நாட்டுக்காக உழைத்து, சர்வோதயத் திட்டத்தால் கவரப்பட்டு, ஏழை எளியவர்களுக்காகப் பாடுபட்டுத் தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டார். சுதந்திரத்தின் பலனையோ, பதவி, பகட்டு, பவிஷுகளையோ பெறாத இவர், எந்த எதிர்பார்ப்புமின்றி சாதாரண காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து வந்தார். வாழ்க ஏ.சுப்பிரமணியம் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.