69 டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி

அந்தக் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல அரசியலிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் முன்னணியில் நின்று போராட்டங்களை வழிநடத்துவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நமது கலாச்சாரம், பண்பாடு இவற்றில் மக்கள் வைத்திருந்த அதீதமான நம்பிக்கை. அதுபோலவே பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிப்பதும் இல்லை. அப்படி உயர்கல்வி கற்று மேம்பட்ட திறமையுடன் வெளிவந்தவர்களில் அனேகம் பேர் மேற்சொன்ன வேலிகளை உடைத்தெறிந்து விட்டு முன்னணியில் விளங்கியிருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, மதுரை அகிலாண்டத்தம்மாள் (மதுரை வைத்தியநாத அய்யரின் மனைவி), மஞ்சுபாஷ்ணி அம்மையார், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்களையும் சொல்லமுடியும்.

மகாகவி பாரதியார் ‘சந்திரிகையின் கதை’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் நிஜமாகவே வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களைக் கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். அதில் வீரேசலிங்கம் பந்துலு வருவார். தி ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வருவார். இப்படிப்பட்ட உயர்ந்த தலைவர்கள் பெண்களின் உயர்வுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள், தாங்களே தடைகளை மீறி செய்தும் காட்டியிருக்கிறார்கள். இங்கு நாம் பார்க்கப் போகிற விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணியை அப்படி உருவாக்கியவர் வீரேசலிங்கம் பந்துலு என்று கூறலாம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்கள் போலீசாரின் தடியடிக்கு ஆளாகி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த வரலாற்றை நாம் நிறைய படித்திருக்கிறோம். ஆனால் அப்படி அடிவாங்கிய பெண்பிள்ளைகளைப் பற்றி அதிகமாகச் செய்திகள் இல்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் 1930இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, தொண்டர்கள் சேர்ந்து குவித்து வைத்திருந்த உப்பை அள்ளிச் செல்ல போலீஸ் முயன்றபோது, அந்த உப்புக் குவியலைச் சுற்றித் தொண்டர்கள் கைகோர்த்து தடுத்தனர். அப்படித் தடுத்த பலரும் போலீசாரின் புளியம் மிளாரினால் அடிக்கப்பட்டனர். தொண்டர்களில் ஒருவராக இந்தப் போரில் ஈடுபட்ட டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியை பெண் என்றும் பாராமல், போலீஸ் புளியம் மிளாரினால் அடித்துத் துவைத்ததோடு, அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தரையில் தரதரவென்று இழுத்து வந்து தூக்கி கூடாரத்தை விட்டு வெளியே எறிந்த கொடுமையும் நடந்தது. இந்தக் கொடுமை நிகழ்வைச் சற்று கண்மூடி கற்பனை செய்து பாருங்கள். அடடா! என்ன கொடுமை இது என்று அலறத் தோன்றும். அந்தக் கொடுமைக்கு ஆளானவர் நாம் இப்போது பார்க்கப் போகும் தேசத் தொண்டர், சமூகத் தொண்டர், தியாகி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள்.

மற்றுமொரு செய்தியையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை யொட்டி மதக்கலவரம் வடநாட்டில் கொடுமையாக நிகழ்ந்தேறியபோது, நேரு சிறையில் இருந்த நேரத்தில், அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினியை மகாத்மா காந்தியடிகளிடம் அனுப்பித் தனக்கு தேச சேவையில் ஈடுபடுத்த வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்திராவும் காந்தியடிகளிடம் சென்று கேட்டார். அவர் சொன்னார். நீயோ சின்னப் பெண். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நீ மதக்கலவரம் நிலவும் டெல்லிக்குச் சென்று என்ன சேவையைச் செய்ய முடியும். நீயே போய் நிலைமையைப் பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லு என்றார். இந்திரா டெல்லி வந்தார். தன்னையொத்த இளைஞர்களை ஒன்று சேர்த்தார். “ஹனுமான் சேனா’ எனும் அமைப்பை ஏற்படுத்தி வன்முறைகளைத் தடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் இந்த சேனையின் மூலம் பாடுபட்டார். அது அங்குமட்டும்தான் நடக்குமா என்ன? ஜவஹர்லால் கேட்டுக் கொண்டபடி இந்திரா செய்ததைப் போல, தென்னகத்தில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள் “வானரசேனை” எனும் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட்டார்.

சீனிவாச ராவ, சூடாமணி அம்மையார் தம்பதியருக்கு 1892ஆம் வருஷம் டிசம்பர் 6ஆம் தேதி ருக்மணி பிறந்தார். இவருடைய தந்தை இவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட முயன்றபோது வீரேசலிங்கம் பந்துலு தலையிட்டு பால்ய விவாகத்தைத் தடுத்தார். மகளை நன்றாகக் கல்வி கற்கச் செய்ய வேண்டினார். அதன்படி பள்ளி சென்று படிக்கத் தொடங்கினார் ருக்மணி. இந்த துணிச்சலை ஊரார் தாங்கிக் கொள்வார்களா. இவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். டாக்டர் லக்ஷ்மிபதி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

திருமதி ருக்மணி லக்ஷ்மிபதிக்குப் பிறந்த குழந்தைகளுள் இறந்தது போக மிச்சம் இரண்டு பெண்கள் ஒரு மகன். இவர்களுள் ஒரு பெண் பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியின் மனைவி இந்திரா ராமமூர்த்தி. ஜாதி சமய வேற்றுமைகளைக் கடந்து இவர் அனைவரிடமும் அன்போடு பழகியதோடு, அதனைச் செயலிலும் காட்டி வந்தார். பெண்களின் முன்னேற்றத்திலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்பே சொன்னபடி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தன் குடும்பத்தை விட்டு போராடி சிறை தண்டனை பெற்றவர் இவர். மகாத்மா காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் ருக்மணியும் ஒருவர்.

1934இல் இவர் சென்னை மகாஜன சபைக்குத் துணைத் தலவரானார். 1936இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவரானார். 1937இல் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினரானார். அதே ஆண்டில் சென்னை சட்டசபையின் மேலவைக்குத் தேர்வாகி துணைச் சபாநாயகராக ஆனார். 1938இல் இவர் ஜப்பான் சென்றார். 1940இல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு கைதானார்.1946இல் சுதந்திரத்துக்கு முன்பு ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் பதவி ஏற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் இவர் சுகாதார அமைச்சரானார்.

தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த வீரப் பெண்மணி, சமூக சேவகி, சிறந்த நிர்வாகி, 1951ஆம் ஆண்டி ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று காலமானார். இன்று பெண்விடுதலை பற்றிப் பலரும் பேசுகிறார்கள். முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு அதனைச் செயலில் செய்து காட்டிய வீரப் பெண்மணி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியின் பெருமைக்கு நாம் அஞ்சலி செய்வோம். வாழ்க டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.