36 தருமபுரி தீர்த்தகிரி முதலியார்

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், குறிப்பாக ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் ஆகஸ்ட் புரட்சியின் போது தர்மபுரி பகுதிகளில் ஆங்கில ஏகாதிபத்திய சர்க்காருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தீர்த்தகிரி முதலியார். இவர் அன்னசாகரம் எனும் ஊரில் ஒரு சாதாரண நெசவாளர் குடும்பத்தில் 1882இல் பிறந்தார். தேசபக்தி காரணமாக காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது இவருக்கு தியாகச்சுடர் சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு.ஐயர், மகாகவி பாரதி, அரவிந்தர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி, திரு வி.க. ஆகிய தலைவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. நல்லா ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இவர் தேசப்பணி என்றால் ஆவேசம் கொண்டு செயலாற்றுவார். இவரை சுப்பிரமணிய சிவா “எம்டன்” என்று அழைப்பாராம்.

1942இல் ஆகஸ்ட் புரட்சியின் போது இவரை கைது செய்து கொண்டு போய் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுத்தனர். வழக்கு இழுத்துக் கொண்டே போயிற்று. வாய்தா வாய்தா என்று வழக்கு முடிவு பெறுவதாக இல்லை. தீர்த்தகிரி முதலியார் பொறுமை இழந்தார். அன்றைக்கு வாய்தா கொடுத்துவிட்ட நீதிபதியைப் பார்த்துச் சொன்னார்: “ஐயா கனம் நீதிபதி அவர்களே! ஒன்று எனக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை இப்போதே கொடுத்து விடுங்கள். அல்லது என்னை விடுவித்து விடுங்கள். இப்படி இரண்டும் கெட்டானாக என்ன இன்று, நாளை என்று இழுத்துக் கொண்டே போனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது” என்றார். நீதிமன்றத்தில் இப்படிப் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா ஆங்கில நிர்வாகத்தினர். இருபத்தி நான்கு மாத கடுங்காவல் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள்.

இவர் சிறையில் இருந்த காலத்தில் உடனிருக்கும் கைதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பார், ஏனென்றால் இவர் ஒரு ஆயுர்வேத வைத்தியர். அதோடு சித்தா, யுனானி ஆகிய வைத்திய முறைகளும் இவருக்குத் தெரியும். 1942இல் நடந்த போராட்டத்தில் இரண்டாண்டுகள் தண்டனை பெற்ற இவரை பெல்லாரி சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இவர் உடல் பருமனைக் கருதி இவருக்கு உடை தைக்க இரண்டாளுக்கு வேண்டிய துணி செலவு செய்ய வேண்டியிருந்தது. அலிப்புரம் ஜெயிலில் ஈரோட்டைச் சேர்ந்த எம்.ஏ.ஈஸ்வரன் அவர்கள் தான் சமையல் பிரிவைக் கவனித்துக் கொண்டிருந்தவர். அவர் விடுதலையான பின் தீர்த்தகிரி முதலியார் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு செய்தார். அந்தக் காலத்தில் கோவையைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் சுதந்திரப் போர் கைதிகளாக இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் முதலியார்தான் தலைவராகச் செயல்பட்டார். இவர் இட்ட பணியை மற்ற சக கைதிகள் செய்து முடிப்பார்கள். சிறையில் இவர் ஒரு முடிசூடா மன்னராகத்தான் விளங்கி வந்தார்.

ஒரு முறை நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யக் கையில் பணமில்லாமல் போய்விட்டது. அவரது மனைவு தன் கை வளையல்களைக் கழற்றிக் கொடுத்து மருந்து தயாரித்துக் கொடுக்கச் செய்தார். கூட்டத்தில் பேசும்போது முதலியாருக்குக் கோபமும் வரும் அதனூடே நகைச்சுவையும் வரும். ஒரு முறை இர்வின் பிரபு பதினோரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தாராம். இதைப் பற்றி குறைகூறி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த முதலியாருக்கு நகைச்சுவை உணர்வு வந்து விட்டது. இவர் சொன்னார், நல்ல காலம் இர்வினுக்கு ஒரு கைதான். இரண்டு கைகளாலும் போட்டிருந்தால் இருபத்திரண்டு சட்டங்கள் அல்லவா போட்டிருப்பான் என்றாராம்.

இவர் ஆயுர்வேத வைத்தியர் என்று குறிப்பிட்டோமல்லவா? சுப்பிரமணிய சிவாவின் ஒத்துழைப்போடு இவர் இந்த வைத்திய முறையில் கைதேர்ந்தவராக விளங்கினார். இவரது சிறை வாசத்தின் போது உடன் சிறைப்பட்டிருந்த சக கைதிகளுக்கு வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் வரும் போது இவர் தனது ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தியிருக்கிறார். சிறை அதிகாரிகளே இவரிடம் வந்து இன்ன கைதிக்கு உடல்நலம் இல்லை, நீங்கள் மருந்து கொடுங்கள் என்று வாங்கி கொடுப்பதும் வழக்கம். இவர் ஒரு பல்பொடி தயாரித்திருந்தார், அதற்கு பெருந்தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவாக “சித்த்டரஞ்சன் பல்பொடி” என்று பெயரிட்டிருந்தார். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா கட்ட விரும்பிய பாரத மாதா ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு தலைவர் சித்தரஞ்சன் தாசை அழைக்க இவரே காரணமாக இருந்தார். மூலிகைகள் பற்றிய அறிவு இவருக்கு அதிகமாக இருந்த காரணத்தால் இவர் அந்த மூலிகை வைத்தியத்தையே தனது தொழிலாக ஏற்றுக் கொண்டார்.

இவர் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள நிலச்சுவாந்தார். தனது சொத்துக்களைச் சிறுகச் சிறுக விற்று சுதந்திரப் போராட்டத்திற்காகச் செல்வு செய்து விட்டார். இந்த நாடு சுதந்திரம் அடைந்தபோது அவருக்கு வயது 67. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இவருக்கு தள்ளாமையும் வறுமையும் வந்து சேர்ந்தது. 1946இல் அந்தப் பகுதியில் ஒரு ஏரி உடைப்பெடுத்த காரணத்தால் இவரது வீடும் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஏழ்மையின் பிடியில் இவர் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 1953ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி இவரது ஆவி கூடுவிட்டுப் பிரிந்தது. நாட்டுக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இவருக்கு இதுதான் பரிசா?

இவர் பெயரால் “தியாகி தீர்த்தகிரியார் சதுக்கம்” என்ற இடம் இருக்கிறது. ஆனால் இவருக்கென்று நினைவிடம் எதுவும் இல்லை. 1947இல் தருமபுரி மாவட்ட சித்த வைத்திய சங்கத்தை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார். தருமபுரி காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தார். சேலம் மாவட்டத் தலைவராகவும் இருந்திருக்கிறார். கைத்தறிக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தையும் ஏற்படுத்தினார். தேச சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய இவர் துன்பமும் துயரமும் சூழ தன் வாழ்வை முடித்துக் கொண்டார். சுதந்திரம் பெற்று ஆறாண்டு காலம் வாழ்ந்தும் இவருடைய வாழ்வில் ஒளி தோன்றாமலே போய்விட்டது. இவருடைய நினைவாக தருமபுரி நகர் மன்ற மைதானம் “தியாகி தீர்த்தகிரியார் மைதானம்” எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. வாழ்க தீர்த்தகிரி முதலியார் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.