தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் திருக்கருகாவூர் எனும் பிரசித்தி பெற்ற தலமொன்றில் பிறந்தவர் வெங்கட்டராமையர் எனும் பந்துலு ஐயர். இவர் தேசபக்தியின் காரணமாக இவர் காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டார். அதற்கு வசதியாக இவர் கும்பகோணம் நகரத்துக்குக் குடி பெயர்ந்தார்.
1930ஆம் ஆண்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்ச்சி நந்து கொண்டிருந்தபோது, தொண்டர்கள் ராஜாஜி தலைமையில் கால்நடையாக திருச்சியிலிருந்து கும்பகோணம் வந்தபோது, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அப்போது அதன் தலைவராக இருந்த பந்துலு ஐயர் அவர்களை வரவேற்றார். டவுன் ஹை ஸ்கூலுக்கு எதிரில் இப்போதுள்ள காந்தி பார்க் இருக்கும் இடத்தில் தொண்டர்களுக்கு ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தலையெடுத்து வளர்ந்து கொண்டிருந்த ‘சுயமரியாதை’ இயக்கத்தினர் இந்தத் தொண்டர்கள் இவர்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், அதில் பல கேள்விகளை எழுப்பியும், கூட்டத்தில் கலவரம் செய்ய முயன்றனர். கூட்டத்துக்கு பந்துலு ஐயர்தான் தலைமை வகித்திருந்தார். நிலைமையை கட்டுப்படுத்தியபின் கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார். ராஜாஜி முதலிய தலைவர்கள் காமாட்சி ஜோசியர் தெருவில் இருந்த பந்துலு ஐயரின் வீட்டில்தான் தங்கினர்.
பின்னர் உப்புச் சத்தியாக்கிரகப் படை மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் சென்றடைந்த போது, இவர் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற கூட்டங்களில் எல்லாம் உரையாற்றினார். கடைசியில் வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இவர் பங்கேற்று, க.சந்தானம் உள்ளிட்டோரோடு கைதாகி சிறை தண்டனை பெற்று திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இவர் மட்டுமல்ல, இவரது குடும்பவே சுதந்திர வீரர்களைக் கொண்ட குடும்பம். இவரது மகன்கள் சேஷு ஐயர், டி.வி.கணேசன் ஆகியோரும் விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள். தஞ்சை மாவட்டம் சீர்காழியை அடுத்த உப்பனாற்று பாலத்துக்கு வெடி வத்துத் தகர்க்க முயன்ற குற்றத்துக்காக சீர்காழி ரகுபதி ஐயரின் புத்திரன் சுப்பராயனோடு, சேஷு ஐயரும், டி.வி.கணேசனும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கணேசன் ‘தினமணி’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். இந்தப் பத்திரிகை அதிபர் இராம்நாத் கோயங்கா, தினமணி ஏ.என்.சிவராமன், ராமரத்தினம் ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். எனினும் சேஷு ஐயர் வழக்கிலிருந்து விடுதலையானார். ஆனால் கணேசன் விடுதலை ஆன கையோடு, பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிகத் தீவிரமான அடக்குமுறையை 1930இல் கையாண்ட தஞ்சை கலெக்டர் தார்ன் துரைக்குச் சவாலாக விளங்கிய பந்துலு ஐயர் ஏராளமான தொல்லைகளுக்கு ஆளானார். மாறி வந்த அரசியல் சூழ்நிலையில் பந்துலு ஐயரின் குடும்பம், அவர்களின் வாரிசுகள் இவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டு விட்டனர். இந்த தியாகசீலர் பற்றிய மேலும் விவரங்கள் வைத்திருப்போர் தயைகூர்ந்து அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் பந்துலு ஐயர் பற்றிய வரலாற்றைத் தொகுத்து வெளியிட முயற்சி செய்யலாம்.
Feedback/Errata