அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் என்றால் தியாகி டி.எஸ்.அருணாசலம் அவர்கள்தான் நம் நினைவுக்கு வருவார். இவரது பெயரால் மெயின் கார்டு கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகக் கட்டடம் “அருணாசலம் மன்றம்” என்ற பெயரால் விளங்கி வருவதை அறியலாம். மெலிந்த உடல், வலிமை பொருந்திய உள்ளம், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கக்கூடிய மன உறுதி, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தனது தளராத உழைப்பாலும், தேசபக்தியாலும், தியாக உள்ளத்தாலும் முன்னுக்கு வந்தவர். திருச்சி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திச் சென்ற ஒரு சிலரில் இவர் முதன்மையானவர் என்றால் மிகையன்று. கர்ம வீரர் காமராஜ் இவரது தியாகத்தையும், தீரத்தையும் போற்றி இவர் மீது அசைக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.
திருச்சி மாவட்டத்துக்காரர் என்றபோதிலும் இவரது பணியைத் தமிழ் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது. மிக மிக சாமானிய குடும்பத்தில் வந்தவர், மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த பல தலைவர்களும் இவரைத் தமக்குச் சமமாக நடத்தினர். இவர் காலத்தில் செல்வத்திலும், கல்வியிலும் உயர்ந்திருந்த தியாக சீலர்கள் திருச்சி மாவட்டத்தில் இருந்தார்கள். அவர்களில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹிந்தி பிரச்சார சபா பாலகிருஷ்ண சாஸ்திரி, ரத்தினவேலு தேவர், டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி, என்.ஹாலாஸ்யம், கதர் சங்கிலியா பிள்ளை, கரூர் நன்னா சாஹிப் ஆகியோர் நினைவுகூரத் தக்கவர்கள். இவர்களெல்லாம் இருந்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி மிக எளியவரான டி.எஸ்.அருணாச்சலத்தைத் தேடி வந்தது என்றால் அது இவரது பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.
மகாத்மா காந்தி இட்ட கட்டளைகளையெல்லாம் தலைமேற்கொண்டு தளராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியினாலும், மாவட்டம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களைச் சந்தித்து போராட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், தொண்டர்கள் கைதானால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வந்தார் அருணாச்சலம். காங்கிரஸ் தொண்டர்களும், அனுதாபிகளும், தேசபக்தர்களும் இவரைத் தங்கள் சொந்த சகோதரரைப் போலவே பாவித்தார்கள்.
1930ல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்குப் பிறகு தமிழ் மாநிலத்தில் நடந்த அத்தனை போராட்டங்களும் பெரும்பாலும், திருச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் மிகச் சாதாரண தொண்டர்களால் நடத்தப்பட்டவை. இதற்கு அருணாசலமே காரணம். சாமானியர்களின் தலைவர் என்று இவர் போற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலும் பெரிய தலைவர்களை தொண்டர்களும் சாமானியர்களும் கிட்டே நெருங்கவோ, சகஜமாகப் பேசவோ முடியாத நிலையை மாற்றி இவர் தொண்டர்களுள் ஒருவராகவே இருந்தார். இதன் காரணமாக கிராமப் புறங்களில் காங்கிரஸ் இயக்கம் வேரூன்றி வளர்ந்தது. இளைஞர்கள் பெருமளவில் இவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.
இப்படித் தொண்டர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட காரணமாக இருந்த டி.எஸ்.அருணாசலத்துக்கு பலர் உதவியாக இருந்தனர். அவர்கள் அறிவானந்தசாமி, வாங்கல் மருதமுத்து பிள்ளை, அரியலூர் எல்.சபாபதி, திருச்சி டி.எம்.மாசி கோனார், லாடபுரம் எம்.குருசாமி நாயுடு, செட்டிக்குளம் வி.எஸ்.பி.ராமசாமி ரெட்டியார், பாதர்பேட்டை வி.ஏ.முத்தையா, காட்டுப்புத்தூர் கே.ஏ.தர்மலிங்கம், குளித்தலை கே.செல்லப்பன், வெள்ளனூர் ஏ.ரெங்கசாமி உடையார், புதூர் உத்தமனூர் கோ.கிருஷ்ணசாமி உடையார், வேங்கூர் எஸ்.சாம்பசிவம், ஸ்ரீரங்கம் சேதுராமன் முதலானோர் ஆவர்.
திருச்சி மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என்ற வகையில் பிரிந்து ஒருவருக்கொருவர் நட்புரிமையுடன் ஒன்றுபட்டு போராடுவதற்கு பதில் பிரிந்து நின்றார்கள். இதற்கு தமிழ்நாடு காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்ற பெயரால் அதிகாரபூர்வமற்ற செயல்பாடும் ஓர் காரணமாக இருந்தது. என்றாலும் கூட டி.எஸ்.அருணாச்சலம் கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்கள் பிரதிநிதியாக காங்கிரஸ் தலைவராக திருச்சி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்த வரலாறு நாடு அறியும். வாழ்க தியாக டி.எஸ்.அருணாச்சலம் புகழ்!
Feedback/Errata