16 திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்

திருச்சி நகருக்கு அடையாளச் சின்னங்களாக விளங்கும் மலைக்கோட்டை, தெப்பக்குளம் போன்ற பல இடங்களில் ‘தேவர் ஹாலும்’ ஒன்று. பழைமை வாய்ந்த அந்த அரங்கம் இப்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. முன்பு அதில் நடைபெறாத நாடகங்களோ, பொதுக்கூட்டங்களோ இல்லையெனலாம். நவாப் ராஜமாணிக்கம் இங்கு முகாமிட்டிருந்த காலத்தில் இங்குதான் அவரது நாடகங்கள் நடைபெற்றன. பிரச்சினைக்குரிய எம்.ஆர்.ராதாவின் நாடகங்களும் இங்குதான் நடைபெற்றன. இது ஒரு சரித்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்தது. அது சரி! இந்த ‘தேவர் ஹால்’ என்பது எவர் பெயரால் அப்படி அழைக்கப்படுகிறது. அவர்தான் திருச்சியில் நகர்மன்றத் தலைவராகவும், ஜில்லா போர்டு தலைவராகவும், புகழ்மிக்க காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய பி.ஆர்.ரத்தினவேல் தேவர் பெயரால் அழைக்கப்படும் இடம் இது.

‘தேவர்’ என்ற இவரது பெயரையும், இவருக்கு அன்று திருச்சியில் இருந்த செல்வாக்கையும், மக்கள் ஆதரவையும் பார்க்கும்போது ஒரு ஆஜானுபாகுவான முரட்டு தலைவரை கற்பனை செய்து கொள்ளத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. இவர் மெலிந்த உடலும், வைர நெஞ்சமும், மனதில் இரும்பின் உறுதியும் ஆண்மையும் நிறைந்த ஒரு கதாநாயகன் இவர். இப்போது திருச்சியில் இவருக்கு நிறுவப்பட்டுள்ள சிலையைப் பார்க்கும்போதுதான் நம் கற்பனை சிதறிப் போகிறது. இவ்வளவு சிறிய ஆகிருதியை வைத்துக் கொண்டா அவர் அன்று திருச்சியை மட்டுமல்ல, தமிழக அரசியலையே ஒரு கலக்கு கலக்கினார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பி.ஆர். தேவர் என்று அழைக்கப்படும் அந்த ரத்தினவேல் தேவர் திருச்சியின் ஒரு பகுதியான உறையூரில் வசித்து வந்தார். இவரது அரசியல் பிரவேசத்துக்குப் பின் அதிகம் வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளூர் அளவில் திருச்சி முனிசிபாலிடியில் அதன் தலைவராகவும் ஆகியிருந்தார். 1933இல் மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு திருச்சி நகர் மன்றத்தின் சார்பாக ஒரு வரவேற்புக்கு தேவர் ஏற்பாடு செய்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட நகர்மன்றம் மகாத்மாவுக்கு வரவேற்பளிப்பதை ஆளும் வர்க்கமும் அதன் ஜால்ராக்களான ஜஸ்டிஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்தன. அந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து தேவர் அளித்த வரவேற்பு அவரது துணிச்சலை வெளிக்காட்டியது. அந்தக் காலத்தில் திருச்சி நகரம் குடி தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்ட காலம். தேவர் மிகத் திறமையோடு திருச்சியின் குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டதோடு மக்களின் பேராதரவையும் பெற்றார். இவரது இந்த செயல்பாட்டை அப்போதிருந்த மாநில நீதிக்கட்சி அரசாங்கம் எதிர்த்தது. மக்களின் துணையோடு அவர் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு புகழ் பெற்றார்.

அநீதிக்குத் தலைவணங்குவது என்பது தேவரின் அகராதியிலேயே கிடையாது. இதன் காரணமாக இவர் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. மகாத்மா காந்தி துவக்கிய தனி நபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்படியொரு முறை இவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அப்போது சிறை அதிகாரியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார்.

தேவர் தஞ்சாவூர் சிறையில் இருந்த காலத்தில் அங்கு ராஜாஜி போன்ற பல பெரிய தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் சிறை அதிகாரி பேரேடு நடத்தும்போது கைதிகள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்குமானால் தங்கள் கையை முன்புறம் நீட்டவேண்டும். உடனே அதிகாரி அவரிடம் விசாரிப்பார். அதுபோல ஒருமுறை ராஜாஜி அவர்கள் தன் கையை நீட்டவும், ஜெயிலராக இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி அவர் கையைத் தன் கைத்தடியால் தட்டிவிட்டு அவரை கேவலமாகவும் பேசிவிட்டான். அப்போது அவரோடு உடன் இருந்த தேவருக்கு தாங்க முடியாத ஆத்திரம் வந்து விட்டது. அந்த அதிகாரி மீது பாய்ந்து தாக்க முயன்றபோது ராஜாஜியும் மற்றவர்களும் தடுத்து விட்டனர். பிறகு சில ஆண்டுகள் கழிந்தபின் ராஜாஜி சென்னை மாகாண பிரதான அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது அவர் திருச்சிக்கு விஜயம் செய்து பி.ஆர்.தேவர் அவர்கள் இல்லத்தில் தங்கி இருந்தார். பல அரசாங்க அதிகாரிகளும் முதலமைச்சரை அங்கு வந்து சந்தித்தனர். அப்போது திருச்சி சிறையின் உயர் அதிகாரியாக இருந்தவர் முன்பு தஞ்சாவூரில் ராஜாஜியை அவமரியாதை செய்த வெள்ளைக்கார அதிகாரி. அவரும் ராஜாஜி கூப்பிட்டு அனுப்பியிருந்ததால் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் ராஜாஜி பழைய நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு தன்னை பழிவாங்கி விடுவாரோ என்ற பயத்தில் இருந்தார். இறுதியாக அந்த வெள்ளை அதிகாரி அழைக்கப்பட்டார். அவர் ராஜாஜியின் முன்பு வந்தபோது ராஜாஜி எதுவுமே நடைபெறாதது போல, சிறையில் செய்ய வேண்டிய சில சீர்திருத்தங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் செய்து வசதி செய்து கொடுக்கும்படி சொல்லிவிட்டு, நீங்கள் போகலாம் என்றார். அதிகாரிக்கு ஏமாற்றம். முன்பு நடந்த நிகழ்ச்சி பற்றி நினைவில் இருப்பது போல கூட காட்டிக் கொள்ளவில்லையே என்று வெளியே வந்து ராஜாஜியின் பெருந்தன்மையை புகழ்ந்து தள்ளினாராம். அன்று அவரை அடிக்கப் பாய்ந்த பி.ஆர்.தேவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ராஜாஜி, அந்த அதிகாரிக்கு தான் அடித்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய வலியைக் காட்டிலும் அதிகமாகவே கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தாராம். இப்படியொரு செய்தி அவரைப் பற்றி. இவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார். வாழ்க பி.ஆர்.தேவரின் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.