32 திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்

1919இல் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஜாலியன்வாலாபாக் எனும் இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் இரக்கமில்லாமல், ஆண், பெண் குழந்தைகள் ஆயிரக்கணக்கானோரை பீரங்கி வைத்துச் சுட்டுக் கொன்றது இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரின் கறை படிந்த வரலாற்று நிகழ்ச்சி. உலகம் முழுவதும் இந்த அரக்கத்தனமான செயல் கண்டனத்துக்கு உள்ளானது. மனித இனமே வருந்தி தலைகுனிந்த போது ஜெனரல் டயர் மட்டும் பெருமிதத்தோடு சொன்னான், குண்டுகள் தீர்ந்துவிட்டன, இல்லாவிட்டால் இன்னமும் பல உயிர்களைப் பறித்திருப்பேன் என்று. என்ன ஆணவம்? என்ன திமிர்? இந்தச் செயலை இந்திய தேசபக்தர்கள் நாடெங்கணும் கூட்டங்கள் கூட்டி மக்களிடம் சொல்லி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்கள் உணர்வுகளைத் திரும்பச் செய்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டதொரு கூட்டம் 1920இல் திருமங்கலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசியவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும், சென்னை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தவருமான கிருஷ்ணசாமி சர்மா என்பவராவர். இவர் இதற்கு முன்பும் வ.உ.சி. கைதானதை எதிர்த்து கரூரில் பேசிய பேச்சு தேசவிரோதம் என்று சிறையில் அடைக்கப்பட்டவர். மாபெரும் தியாகி. தமிழக மக்களால் மறக்கப்படக்கூடாதவர் ஆனால் மறக்கப்பட்டவர். இப்படிப்பட்ட தேசபக்தரின் வீராவேசப் பேச்சைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு தனக்கு வயது 16தான் என்பதைக்கூட மறந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தேசசேவையில் ஈடுபட்டவர் திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம். இவரது தந்தையார் பெயர் சுப்பிரமணிய ஐயர்.

காங்கிரசில் சேர்ந்ததோடு தனது பணி முடிந்துவிட்டதாக இவர் கருதவில்லை. ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார். மக்களிடம் ஆவேசமாகப் பேசி அவர்கள் உள்ளங் களிலெல்லாம் தேசபக்தி விதையைத் தூவினார். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் இவரால் தயார் செய்யப்பட்ட வீர இளைஞர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இவர் தேச சேவையில் ஈடுபட்ட நாள் முதலாக இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டங்கள், மகாநாடுகள், போராட்ட பிரச்சாரம் என்று இவர் ஈடுபடாத நிகழ்ச்சிகளே இல்லையெனலாம். இவர் வேறு எவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். தானே முன்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்து முன்னணியில் இருப்பார். ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டால் போதும், அது முடியும் வரை கண் துஞ்சார், பசி அறியார், கருமமே கண்ணாயிருப்பார். தலைவர் தீரர் சத்தியமூர்த்திக்கு இவரிடம் அன்பு அதிகம். இந்த இளம் வயதில் இப்படியொரு தேசாவேசமா? இவருக்குத் தகுந்த ஆதரவு கொடுத்தால், இவர் பல அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர் என்பதனை தலைவர் உணர்ந்தார். தீரர் சத்தியமூர்த்தி இவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநிலக் குழு உறுப்பினராக சேர்த்தார். தொடர்ந்து காங்கிரசுக்குத் தலைமை வகித்த எஸ்.சீனிவாச ஐயங்கார், முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்ஸலம், காமராஜ் ஆகியோரிடம் இவருக்கு நல்ல தொடர்பும் செல்வாக்கும் இருந்து வந்தது.

1930 இந்திய சுதந்திரப் போரில் ஓர் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில்தான் மகாத்மா உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கினார். தமிழகத்தில் திருச்சி யிலிருந்து வேதாரண்யம் வரை தலைவர் ராஜாஜி உப்பு சத்தியாக்கிரக தொண்டர் படையை அணிவகுத்து அழைத்துச் சென்றார். அதே சமயம், மாகாணத்தின் தலைநகரத்தில் ஸ்ரீமதி துர்க்காபாய் தலைமையிலும், டி.பிரகாசம் தலைமையிலும் உப்பு சத்தியாக்கிரகம் நடந்தது. அதில் ஆதிகேசவலு நாயக்கர், ம.பொ.சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த சென்னை போராட்டத்துக்குப் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பி வைத்தார் மீனாட்சிசுந்தரம். இந்தத் தொண்டர் படைக்கு இவரே தலைவராக இருந்து வழிகாட்டலானார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

1931இல் நாடக நடிகராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த தியாகி விஸ்வநாத தாஸ் திருநெல்வேலியில் நடைபெற்ற நாடகத்தில் மக்களை விடுதலைக்குத் தூண்டும் விதமாக தேசபக்திப் பாடலை பாடினார் என்று வழக்குத் தொடர்ந்தார்கள். விஸ்வநாத தாஸ் கைது செய்யப்பட்டார். இவருக்காக வழக்காடும்படி கோயில்பட்டி சென்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை மீனாட்சிசுந்தரம் கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் சம்மதித்து வழக்கை எடுத்துக் கொண்டார்.

1932இல் சட்ட மறுப்புப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டியதற்காக மீனாட்சிசுந்தரம் கைது செய்யப்பட்டு இரண்டரையாண்டுகள் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை இவர் திருச்சிச் சிறையில் கழித்தார். 1941ஆம் வருஷத்தில் தனிநபர் சத்தியாக்கிரகம் அறிவிக்கப்பட்டது. அப்போது மூண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அதில் மீனாட்சிசுந்தரம் வேகம் காட்டினார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு 4 மாத சிறைதண்டனை பெற்று மதுரை சிறையில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு மத்திய அரசு இவருக்குத் தாமிரப்பட்டயம் கொடுத்து கெளரவித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்பதற்காக இவர் ஓய்ந்து உட்கார்ந்து விடவில்லை. மாறாக தேச நிர்மாணப் பணிகளில் அதே ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் காட்டி உழைத்தார். திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்கு புனருத்தாரணம் செய்வித்துக் கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு தெய்வ பக்தியும் உடையவர். தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டு விட்ட காரணத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே நாட்டுக்காக உழைக்க உறுதிபூண்டுவிட்டார். வாழ்க தியாகி புலி மீனாட்சிசுந்தரம் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.