கர்ம வீரர் காமராஜ் அவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சிய காலத்தில் தென் தமிழ்நாட்டிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை மிக்க உறுப்பினர்களில் தேனி என்.ஆர். தியாகராஜனும் ஒருவர். திராவிட இயக்கத்தினர் தேனி, கம்பம் பக்கம் கூட்டங்கள் போடுவதற்குக்கூட அச்சப்படக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தவர் தேனி என்.ஆர்.தியாகராஜன். நெஞ்சுத் துணிவும், தேசப் பற்றும், தூய கதராடையும், அச்சமற்ற பேச்சும் இவரது அடையாளங்களாகத் திகழ்ந்தன.
இவர் தேனிக்கு அருகிலுள்ள இலட்சுமிபுரம் எனும் கிராமத்தில் பிறந்தார். கிராம காங்கிரஸ் கமிட்டியிலிருந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு தியாகராஜன், படிப்படியாக வளரத் தொடங்கினார். 1939இல் சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1931 முதல் 1942 ஆகஸ்ட் புரட்சிவரையிலான எல்லா போராட்டங்களிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இவர் இல்லாத சிறைச்சாலைகளே இல்லை எனலாம். அலிப்புரம், வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி என இவர் இருந்த சிறைகளின் எண்ணிக்கை அதிகம்.
தேனி நகரத்தில் ஊர்ச்சந்தைக் கூடும் இடத்துக்கு அநியாய கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து தியாகராஜன் போராடினார். அதில் இவர் கைது செய்யப்பட்டு வழக்கில் ஒன்பது மாதம் சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் தலைமறைவாக இருந்து கொண்டு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது திறமையும், ஆற்றலும் இவரது பெருமையை நாடறியும்படி செய்தது. தொடக்கம் முதலே இவர் மாநில காங்கிரஸ் கமிட்டியில் ஓர் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல காமராஜ் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார்.
1949ஆம் ஆண்டு இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு ஜால்ராக்களாக இருந்து கொண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து வந்த ஜில்லா போர்டு இவர் காலத்தில் மக்கள் பணி செய்யத் தொடங்கியது. பல நல்ல திட்டங்களை இவர் கொண்டு வந்து நிறைவேற்றினார். 1957இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேரதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1964இல் இவர் சென்னை சட்டசபை மேல்சபை உறுப்பினரானார்.
1968இல் மேல்சபை எதிர்கட்சித் தலைவராக இருந்து சிறப்பாக பணி புரிந்தார். இவர் மிகவும் சுமுகமாக அனைவரிடமும் பழகக் கூடியவர். நல்ல பண்பாளர். அதிகம் நண்பர்களைப் பெற்றவர். நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. இவர் 1969 ஏப்ரல் மாதம் உடல்நலமில்லாமல் இருந்து இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தியாகி என்.ஆர். தியாகராஜன் புகழ்!
Feedback/Errata