24 பழனி கே.ஆர்.செல்லம்

தமிழகத்தில் மிக அதிக வருமானம் தரும் ஆலயம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். இன்று நேற்றல்ல காலங்காலமாய் பழனி மிகப் பிரசித்தி பெற்ற ஊர். பழனி பஞ்சாமிர்தமும், சித்தநாதன் விபூதியும் உபயோகிக்காதவர்கள் அரிது. அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் தோன்றிய ஓர் அரிய தியாகிதான் கே.ஆர்.செல்லம் ஐயர். பழனிக்கு அருகில் கலையம்புதூர் என்றொரு கிராமம். அங்கு கே.எஸ்.இராமநாத ஐயர் தம்பதியருக்கு 1908இல் மகனாகப் பிறந்தவர் கே.ஆர்.செல்லம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு. விழா கொண்டாடுகிறார்களா காங்கிரஸ்காரர்கள்? நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட தொண்டர்களை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இப்படிப்பட்ட தியாகபுருஷர்கள் இந்த நாட்டில் தோன்ற மாட்டார்கள்.

இவர் மாணவப் பருவத்திலேயே நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே இவர் பழனி நகரத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். அப்போது காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் மணி செட்டியார் என்பவர். அவரது தலைமையின் கீழ் செல்லம் செயலாளராக இருந்து பணியாற்றினார். இளமைத் துடிப்பும், தேசாவேசமும் இவரை பம்பரமாகச் சுழன்று செயல்பட வைத்தன. ஊர் ஊராக, கிராமம் கிராமமாக இவர் சுற்றி வந்து காங்கிரஸ் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறிவந்தார். காந்திய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஊட்டி வந்தார். நூல் நூற்றல், கதர் அணிதல், வெளிநாட்டுத் துணிகளை பகிஷ்கரித்தல் போன்றவற்றில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.

தேசபக்தி காரணமாக தேசசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், வயிற்றுப் பாட்டுக்காக ஒரு சொந்தத் தொழில் வேண்டாமா? பழனியிலேயே ஒரு உணவகத்தை உருவாக்கினார். இவரது உணவகம் தேசபக்தர்கள் கூடும் படைவீடாக மாறியது. இங்கு வரும் தேசபக்தர்களுக்கு உணவளித்து உபசரித்தார். இவர் ஹோட்டலில் வருவோர் மத்தியில் அந்தக் காலத்திலேயே ஜாதி பாகுபாடோ, வித்தியாசமோ எதுவும் இல்லாத சமத்துவ விடுதியாகத்தான் அது விளங்கியது. இவரைச் சுற்றி எப்போதும் காங்கிரஸ் தொண்டர்கள் சூழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் போராட்டமானாலும் இவர் வழிகாட்டுதலுக்காக இளம் தொண்டர்கள் காத்திருப்பார்கள். அப்படி இவரது வழிகாட்டலில் பற்பல தொண்டர்கள் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார்கள். 1930இல் தொடங்கிய இவரது இந்தப் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

பழனி நகரத்து மக்கள் இவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டார்கள். இவர் சொன்ன வழியில் போராட்டங்கள் நடைபெற்றன. இவரது எளிமை, இனிய பேச்சு, பணிவு இவை காரணமாக மக்கள் இவரை மிகவும் விரும்பிப் பின்பற்றலாயினர். 1932இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு இவர் தொண்டர்களை தயார் செய்து அனுப்பி வந்தார். அந்நியத் துணி பகிஷ்காரம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. அதில் இவரது பங்கு மகத்தானது. 1934ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பழனிக்கு விஜயம் செய்தார். அந்த சமயத்தில்தான் ஹரிஜனங்கள் பழனி ஆலயத்தில் நுழையத் தடை இருப்பதறிந்து இவரும் கோயிலுக்குச் செல்லவில்லை. பின்னர் 1937இல் ராஜாஜி தலைமையில் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம், பழனி தண்டபாணி ஆலயம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தபின்னர்தான் காந்தி இவ்விரு கோயில்களுக்கும் வருகை புரிந்திருக்கிறார். மகாத்மா பழனி வந்தபோது ஹரிஜன நிதிக்காக இவர் பணம் திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தார். காந்திஜியோடு நெருங்கி பழகி அவருக்கு
2

உபசாரங்கள் செய்து தங்க வைத்தார். ஊரில் நடைபெறும் கூட்டங்கலில் எல்லாம் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை ஹரிஜன நிதிக்குக் கொடுக்க வைத்தார்.

1935, 36 ஆகிய ஆண்டுகளில் ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, பாபு ராஜேந்திரபிரசாத், தீரர் சத்தியமூர்த்தி, வி.வி.கிரி ஆகியோர் பழனிக்கு விஜயம் செய்த போது அவர்களையெல்லாம் தனது விருந்தினராக ஏற்றுத் தங்க வைத்து உபசரித்து அனுப்பிவைத்தவர் செல்லம் ஐயர். 1937இல் நடைபெற்ற சென்னை சட்டசபைத் தேர்தலில் மட்டப்பாரை வெங்கட்டராமையர் நின்றார். இவருக்கு ஆதரவாக செல்லம் ஐயர் ஊர் ஊராகச் சென்று வாக்குகள் சேர்த்தார். காங்கிரசின் மஞ்சள் பெட்டி வெற்றிக்காக இவர் தீரர் சத்தியமூர்த்தியுடன் சுற்றுப்பயணம் செய்து பாடுபட்டார்.

ராஜாஜியின் ஆணைப்படி மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தது போல் இவர் பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆலயப் பிரவேசம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் இப்படிச் செய்ததால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், அவைகளை இவர் தீரத்துடன் எதிர்கொண்டார்.

1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது இவரும், பி.ராமச்சந்திரன், பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு ஆகியோரும் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் சென்றபோது ரிமாண்டில் 15 நாட்கள் இருந்தார். தேச சேவைக்காகச் சிறை செல்லும் தொண்டர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர் செய்து வந்தார். ராஜாஜி யாரையும் அவ்வளவு எளிதில் பாராட்டிவிட மாட்டார். அப்பேற்பட்ட ராஜாஜியாலேயே பெரிதும் பாராட்டப்பட்டவர் பழனி செல்லம் ஐயர் அவர்கள். இவரது பணி சுதந்திரம் பெற்றபின்பும் தொடர்ந்து நடந்து வந்தது. வாழ்க பழனி கே.ஆர். செல்லம் ஐயரின் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.