14 பழனி P.S.K.லட்சுமிபதிராஜு

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பெயர்களில் பி.எஸ்.கே.லட்சுமிபதிராஜு பெயரும் ஒன்று. இவர் மதுரை மாவட்டம் பழனி நகரத்தில் கிருஷ்ணசாமிராஜு அவர்களின் மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதில் பள்ளிக்கூட நாட்களிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என்று படிப்படியாக எல்லா நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டிலேயே இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறை தண்டனை பெற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வது என்று பிடிவாதமாக இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் புரிந்து கொண்டவர். 1942இல் இவர் பாதுகாப்புக் கைதியாக சுமார் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது சிறைவாசம் அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் கழித்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே மகோன்னத வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் லட்சுமிபதிராஜு நகரசபை சேர்மனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளில் ஒரு நகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அனைத்து வார்டுகளிலும் நின்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக லட்சுமிபதிராஜுவின் பெருமை வெளி உலகுக்குத் தெரியலாயிற்று. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெருந்தலைவர் காமராஜ், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் அவர்கள தலைமையில் லட்சுமிபதிராஜுவுக்கு ஒரு வெள்ளிவாள் பரிசளித்தார்.

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் விவசாயத்துக்காக குரல் கொடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். பழனி தாலுகாவில் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, கொடைக்கானல், பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு, பொருந்தலாறு அணை, ஆய்க்குடி, வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்தார்.

தமிழகத்தில் மிகப்பெரும் கோயிலாகவும், வருமானம் அதிகமுள்ள கோயிலாகவும் இருந்த பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டிகளின் தலைவராக இருந்திருக்கிறார். இவர் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில் பழனி தண்டபாணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வித்து பெருமை பெற்றார். இவர் டிரஸ்ட்டின் தலைவராக இருந்த போது 30 லட்சமாக இருந்த கோயில் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது. கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு கலைக்கல்லூரி, பண்பாட்டு கல்லூரி, பெண்கள் கல்லூரி, நாதஸ்வரத்துக்கென்று ஒரு கல்லூரி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், புதிய சத்திர தங்கும் விடுதி ஆகியவற்றை நிறுவினார். அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.பி.ராமசாமி ஐயர், மைசூர் மகாராஜா சாமராஜ உடையார், பவநகர் மகாராஜ், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, பிஷ்ணுராம் மேதி ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் நமது லட்சுமிபதிராஜு.

இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ். இதிலிருந்து பிரிந்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாட்டுக் கிளை துவக்கப்பட்ட போது அந்த மாநாட்டின் வரவேற்பு கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லட்சுமிபதிராஜு. மலைத்தோட்ட விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக நெய்க்காரபட்டி எஸ்டேட்டில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர்.

இவரது அமைதிப் பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டியிருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும்கூட. சைக்கிள் ஓட்டும் போட்டியில் தங்க கைக்கடிகாரம் பரிசு பெற்றவர். மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். பழனி ஃபைன் ஆர்ட்ஸ் சபாவினால் “தியாகச் செம்மல்” எனும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டவர். மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று ‘ஹரிஜன சேவா சங்கம்’ தொடங்கி நகர துப்புறவுத் தொழிலாளிகள் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஹோட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக சங்கங்கள் அமைத்து அவைகளின் தலைவராக இருந்து பாடுபட்டவர்.

அகில இந்திய ஏலக்காய் வாரியத்தின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பாடுபட்டவர். வாழ்க பழனி லட்சுமிபதிராஜு அவர்களின் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.