9 பாஷ்யம் என்கிற ஆர்யா

தற்காலம் புழக்கத்தில் இருக்கும் மகாகவி பாரதியாரின் படம் அனைவருக்கும் தெரியும். அதனை வரைந்தவர் இந்த பாஷ்யம் எனும் ஆர்யா. சென்னை தலைமைச் செயலகம் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்கிறொமல்லவா, அங்கு வானுயர எழும்பியிருக்கும் கொடிமரத்தையும் பார்த்திருக்கலாம். இந்த கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் பாஷ்யம் எனும் ஆர்யா. இன்று யார் யாரெல்லாமோ ‘மாவீரன்’ என்ற பட்டப் பெயரைத் தாங்கிக்கொண்டிருந்தாலும், நிஜமான, மாவீரச் செயலைப் புரிந்த இந்த மாவீரன் நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்குப் பெருமை. அதிலும் அவர் நம் மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள சேரங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது நமக்கு மேலும் பெருமை சேர்க்ககூடியது. அல்லவா?

சேரங்குளத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தார் பாஷ்யம். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியராக இருந்த ஏ.ரங்கசாமி ஐயங்கார் இவரது உறவினர். மன்னார்குடியில் கல்வி பயின்றார். தன் 11ஆம் வயதில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த படுகொைலையினால் ஆவேசம் கொண்டார். நீடாமங்கலம் சென்று அங்கு நடந்த காந்திஜியின் சொற்பொழிவைக் கேட்டார். தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள உறுதி பூண்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மன்னார்குடியில் முடித்தபின் திருச்சி சென்று தேசியக் கல்லூரியில் பயின்றார். அங்கு படித்த காலத்தில் இவர் படித்த நூல்கள் பாடப்புத்தகங்களைக் காட்டிலும் தேசபக்தி நூல்களே அதிகம். இங்கிலாந்திலிருந்து ‘சைமன்’ என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் இந்தியா வந்தது. காங்கிரசார் அதனை கருப்புக்கொடி காட்டி திரும்பிப்போ என்று போராடினர். சைமன் கமிஷன் திருச்சி வந்தது. அங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். முன் வரிசையில் தேசியக் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்குத் தலைமை பாஷ்யம். முதல்வர் சாரநாதன் காட்டிய கருணையால் அவர் படிப்பு இடையூறு இன்றி தொடர்ந்தது. எனினும் தேசவிடுதலை இவரை அழைத்துக் கொண்டது. பயங்கரவாத அமைப்புகள் இவரை கைநீட்டி வரவேற்றன. புதுச்சேரி சென்றார். அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். பாரதமாதா சங்கம் போன்ற சங்கத்தில் உறுப்பினராகி, காளி படத்தின் முன் ரத்தக் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

சேரங்குளத்துக்குத் திரும்பிய பாஷ்யம் ஏதாவது செய்யத் துடித்தார். அப்போது கவர்னர் மார்ஷ் பாங்சின் என்பவர் சிதம்பரத்துக்கு வருவதாக செய்தி கிடைத்தது. பாஷ்யம் சிதம்பரம் சென்றார். கவர்னர் கலந்து கொண்ட கூட்டத்திற்குச் சென்று அவரைச் சுட முயன்று, முடியாமல் போய்விட்டது. தஞ்சை திரும்பி தனது நண்பர் டாக்டர் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார். டாக்டர் அவர் செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. இனி இதுபோன்ற செயல்களை விடுத்து மகாத்மாவைப் பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.

மதுரையில் ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டி சில நண்பர்களுடன் முயன்றார். அதில் தோல்வியடைந்து போலீசில் சிக்கி சித்திரவதைக்கு உள்ளானார். இவரது நண்பருக்கு ஏழாண்டு சிறை, இவர் மீது எந்த ஆதாரமும் இல்லையென விடுதலையானார். 1931இல் சென்னை சென்று தமையனார் வீட்டில் தங்கினார். போலீஸ் கண்காணிப்பு இருந்தும், இவர் கதர் அணிந்து கதர் துணி விற்பனை செய்தார். அந்நிய துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பயனாய் துணிக்கடைக்காரர்கள் இவர் மீது எச்சிலை உமிழ்ந்தார்கள், சிகரெட்டால் சுட்டார்கள், தலையில் கள்ளுப்பானையைப் போட்டு உடைத்தார்கள். ஜவஹர்லால் நேரு ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திர தினமாக அனுசரிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பாஷ்யம் ஒரு சாகசத்துக்கு தயாரானார்.

1932 ஜனவரி மாதம் 26ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய தேசிய மூவண்ணக் கொடியன்றை இவரே தைத்துக் கொண்டார். நடுவில் மையினால் ராட்டை வரைந்து கொண்டார். அதன் கீழ் “இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது” என்று எழுதினார். ஜனவரி 25, மாலை 7 மணிக்கு கொடியைத் தன் உடைக்குள் மறைத்துக் கொண்டு, தன்னுடன் தியாகி சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனைத் தன்னைப் பின் தொடரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு திரைப்படக் கொட்டகை சென்று சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரகசியமாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரம் குறுக்களவு 3 அடி உள்ள கம்பத்தில் ஏறினார். அப்போது சுழலும் விளக்கின் வெளிச்சம் படும்போதெல்லாம், கம்பத்தின் மறுபுறம் ஒளிந்து ஏறி யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு அதில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு இறங்கி சாமர்த்தியமாக ஓடி தப்பிவிட்டார். காலையில் ஒரே பரபரப்பு. கோட்டையில் ராணுவ வீரர்கள் பதட்டமடைந்தனர். கவர்னருக்குச் செய்தி போயிற்று. இதனைச் செய்தவரைக் கண்டுபிடிக்க போலீஸ் தலைகீழாக நின்றும் பயனில்லை. இன்று வரை அந்த செயலைச் செய்தவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் அரசாங்க ஆவணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் அந்நிய துணிகளை விற்கும் பிரம்மாண்டமான கடைகளில் துணிகள் அடிக்கடி தீப்பற்றி எரிவதாக புகார்கள் வந்தன. அவைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி தீ விபத்து நடந்த கடைகளுக்கு பாஷ்யமும் அவரது நண்பர்களும் போய்வந்ததும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாஷ்யம் அப்போது கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர்ஹைதர் கான், சி.எஸ்.சுப்பிரமணியம், புதுச்சேரி சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் 1942இல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கியது. பாஷ்யம் எனும் மீன்குட்டிக்கு நீந்துவதற்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். புகுந்து விளையாடினார். இவர் ஓர் ஓவியர். நிறைய படங்களை வரைந்து வைத்திருந்தார். அப்படித்தான் மகாகவி பாரதி படத்தையும் வரைந்தார், அது பின்நாளில் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1945இல் முழு நேர ஓவியரானார், “ஆர்யா” எனும் புனைபெயரைத் தாங்கிக் கொண்டார். மகாத்மா, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். இவர் நீண்ட நாட்கள் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் காலமானார். வாழ்க வீரர் பாஷ்யம் எனும் ஆர்யாவின் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *