
பூஜாபதி சஞ்சீவி ராஜா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் இந்த குமாரசாமி ராஜா. இவரது ஊர் முன்பே சொன்னது போல ராஜபாளையம். பிறந்த ஒரு சில நாட்களிலேயே அன்னையை இழந்த துர்ப்பாக்கியசாலி இவர். மூன்று வயது ஆனபோது தந்தையும் இறந்தார். கூடப் பிறந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் தனிமையில் அவருடைய பாட்டியால் வளர்க்கப்பட்டார். ராஜபாளையம் பகுதிகளில் ஆந்திரப் பகுதிகளிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டில் வந்து குடியேறிய படைவீரர்கள் பரம்பரையினரை ராஜா என்று அழைப்பர். அந்தக் குடியில் வந்த இந்த குமாரசாமி ராஜா பள்ளிக் கல்வியை முடித்தவுடன் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றார். உள்ளாட்சி முறை மூலம் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்பதால், இவர் உள்ளாட்சி விவகாரங்களில் ஆர்வம் காட்டினார்.
அன்னி பெசண்டின் ஹோம்ரூல் இயக்கத்தில் ஆர்வம் காட்டினார். தீரர் சத்தியமூர்த்தியின் வீர முழக்கங்கள் இவரது சுதந்திர நாட்டத்தை அதிகரித்தன. காங்கிரஸ் இயக்கத்தையும், மகாத்மா காந்தியையும் இவர் உயிருக்குயிராக நேசித்தார். முதன் முறையாக மகாத்மா காந்தியை இவர் சந்தித்த பிறகு இவர் தனது வாழ்க்கை முறையையே எளிமையாக மாற்றிக் கொண்டார். காந்திய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் நற்காரியங்களில் இவர் ஈடுபடலானார்.
1932இல் சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் முதன் முறையாக சிறை சென்றார். விடுதலையான பிறகு 1934இல் திரு நெல்வேலி, மதுரை, இராம நாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சார்பாக சென்னை சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெறும் காலகட்டத்தில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், ராஜாஜி ஆகியோருக்கிடையே சென்னை மாகாணத்திற்கு யார் பிரதமராக வருவது என்ற பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி குமாரசாமி ராஜாவின் பெயரைத் தேர்ந்தெடுத்தது. 1949 தொடங்கி 1952 வரையிலான காலகட்டத்தில் இவர் சென்னை மாகாண முதலமைச்சராக (பிரதமர்) பதவி வகித்தார்.
இவருடைய காலத்தில்தான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; பலர் தலைமறைவாயினர். 1952இல் முதல் தேர்தல் நடந்த போது, காங்கிரஸ் கட்சி வலுவிழந்து போன நிலையில் நேருவின் ஆலோசனைப்படி, காமராஜ் அவர்களின் சம்மதத்துடன் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்க அழைக்கப்பட்டார். இதன் பிறகு குமாரசாமி ராஜா ஒரிசா மானிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இவருடைய ஆட்சி காலம் சென்னை மாகாணத்தில் பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைக் கண்டது. அவை மதுவிலக்கு அமலாகியது. கதர் கைத்தறி ஆடைகளுக்கு புத்துயிர் கிடைத்தது; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேசம் சட்ட பூர்வமாக ஆக்கப்பட்டது; கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது போன்ற பல நிகழ்வுகளைச் சொல்லலாம்.
ராஜபாளையத்தில் பலரும் மிகப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தனர். செல்வ செழிப்பு மிக்க சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தனது பிரம்மாண்டமான வீட்டை காந்தி கலை மன்றம் எனும் அமைப்புக்குத் தானமாக அளித்தார். இவர் சென்னை ராஜதானியில் பதவி வகித்த காலத்தில் பவ நகர் மகாராஜா கவர்னராக பதவி வகித்தார்.
கடுமையான சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்திலும், பிரிட்டிஷ் அடக்குமுறை தாண்டவமாடிய காலகட்டத்திலும் இந்தியா பிளவு பட்டு பாகிஸ்தான் உருவான போதும், சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் நல்வாழ்வுக்காக பாடுபடவேன்டியிருந்த காலகட்டத்திலும், சிக்கலான நேரத்தில் இவர் முதல்வர் பதவி வகித்த காரணத்தால், பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம், இவர் திறமையோடு கையாண்டார் என்பது கவனிக்கத்தக்கது. அமைதியும், பொறுமையும், நடு நிலைமையும் இவரது ஆயுதமாகப் பயன்பட்டது. சிறப்பான இடத்தைத் தனக்கென அமைத்துக் கொண்ட தியாகி குமாரசாமி ராஜா புகழ் வாழ்க!
Feedback/Errata