1940ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி சென்னை மாகாணத்தில் வெளிவந்த அத்தனை நாளிதழ்களிலும் சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் இதோ:
” 100 ரூபாய் இனாம்!! இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தேடப்பட்டுவரும் கீழ்கண்ட நபர்களைப் பற்றிய நம்பகரமான தகவல்களைத் தரும் எவருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் மற்றும் சென்னை சி.ஐ.டி. இலாகாவும் 100 ரூபாய் அன்பளிப்பு தரும். (1) பி.ராமமூர்த்தி, வேப்பத்தூரைச் சேர்ந்த வி.பஞ்சாபகேச சாஸ்திரிகளின் மகன், வயது 36/40, உயரம் 5அடி 4 அங்குலம். பிரவுன் நிறம். மெல்லிய உடல். கிராப்புத் தலை, வலதுகால் ஊனம்”. இவர் தவிர அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர். இவர்களுக்கு உதவி செய்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியது அந்த விளம்பர வாசகம். இதிலிருந்தே இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள் என்று தெரிகிறதல்லவா?
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் யுத்த எதிர்ப்பில் தீவிரமாக இருந்தார்கள். பின்னர் ஹிட்லர் ரஷ்யாவின் மீது படையெடுத்தபின், இது மக்கள் யுத்தம் என்று பெயரிட்டு, ஆங்கில அரசின் யுத்த முஸ்தீபுகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அப்படி முதலில் யுத்த எதிர்ப்பில் பி.ஆர். எனப்படும் ராமமூர்த்தி தீவிரமாக இருந்ததால், இவரை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேப்பத்தூர் எனும் கிராமத்தில் வீட்டுக் காவலில் வைத்தார்கள். ஆனால் இவர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தலைமறைவாகி விட்டார். இவரது அரசியல் வாழ்க்கை பெரும்பாலும், கடைசிகாலம் தவிர போராட்டக் களமாகவே இருந்தது எனலாம்.
இவர் 1908 செப்டம்பர் 20ஆம் தேதி வேப்பத்தூரில் பஞ்சாபகேச சாஸ்திரிகள், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். படிப்பில் படுசுட்டியான ராமமூர்த்தியை விடுதலை வேட்கைப் பற்றிக் கொண்டது. 1919இல் ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டில் அனைவரும் வீட்டிலேயே உண்ணா நோன்பு இருக்க மகாத்மா பணித்தபோது பி.ஆரும். வீட்டில் உண்ணாவிரதம் இருந்தார். காந்திஜியின் அழைப்பை ஏற்று இவர் கதர் மட்டுமே உடுத்தினார். 1920ஆம் ஆண்டில் ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க மரத்தின் மேல் ஏறியபோது கீழே விழுந்து கால் ஊனம் ஆனது. அது கடைசிவரை இருந்தது.
இவர் வீட்டில் சொல்லாமல் திருட்டு ரயில் ஏறி அலஹாபாத் சென்றார். வழியில் பல இடங்களில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். சபர்மதி ஆசிரமம் சென்று சேர விரும்பினார். அப்போது காந்திஜி சிறையில் இருந்தார். ராஜாஜி “யங் இந்தியா” பத்திரிகை நடத்திக் கொண்டு அங்கு இருந்தார். அவர் ராமமூர்த்தியிடம் நீ இப்போது இங்கு செய்யக்கூடியது எதுவுமில்லை. ஊருக்குச் சென்று மீண்டும் படிப்பைத் தொடங்கு என்றார். வேறு வழியின்றி சென்னை திரும்பி இந்து உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். 1926இல் பள்ளி இறுதி தேறினார். பிரசிடென்சி கல்லூரி எனும் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அரசியலுக்காக கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டு வெளியேற்றப்பட்டார். காசிக்குச் சென்று அங்கு நான்காண்டு காலம் படித்தார். 1930இல் பி.எஸ்.சி. முடித்ததும் அரசியல் போராட்டத்தில் சிறைப்பட்டார்.
சென்னை திரும்பி ரயில்வே பணியில் சேர்ந்தார். எனினும் சமூகப் பணிகளும், அரசியல் பணிகளும் அவரை இழுத்துக் கொண்டன. 1932இல் திருவல்லிக்கேணியில் சத்தியாக்கிரகம் செய்து ஆறுமாத சிறை தண்டனை பெற்றார். இவரது சமூகத் தொண்டின் ஒரு பகுதியாக இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகக் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களை உறுப்பினராக ஆக்க எடுத்துக் கொண்ட முயற்சி, வழக்கு விசித்திரமானது. தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பிரபந்தங்கள் சொல்லிக் கொடுத்து கோயிலை வலம் வரச் செய்தார். அவர்களுக்கு கோயில் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அப்போது கோயில் தர்மகர்த்தா தேர்தல் வந்தது. இவர் 200 செறுப்பு தைக்கும் தொழிலாளிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு வைணவ முறைப்படி தோளில் சங்கு சக்கரம் பொறிக்கச் செய்து கோயில் உறுப்பினராக ஆக்க முயன்றார். வைணவர்கள் மறுத்துவிட்டனர். இவர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராமப்பா எனும் நீதிபதி விசாரித்தார். இவர்களுக்கு டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரி ஆஜரானார். வைணவர்களுக்கு வரதாச்சாரியார் என்பவர் ஆஜரானார். நீதிபதி இவர்களைப் பார்த்துக் கேட்டார் உங்கள் குரு யார் என்று. அதற்கு அவர்கள் சாத்தாணி ஐயங்கார் என்றார்கள். இவ்வழக்கில் பி.ஆர். எடுத்துக் கொடுத்த ஒரு பாயிண்ட் ‘பாஞ்சராத்ரம்’ எனும் ஆகமப் பிரிவின் கீழ் எந்த ஒரு வைஷ்ணவனும் மற்றொரு வைஷ்ணவனைப் பார்த்து நீ என்ன சாதி என்று கேட்கக்கூடாது. அப்படிக் கேட்பது தன் தாய்;உடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்குச் சமம் என்பதை வக்கீல் வாதத்திற்கு எடுத்துக் கொண்டார். வழக்கில் வெற்றி. செறுப்பு தைக்கும் தொழிலாளிகள் வெற்றி பெற்றாலும், இவர்களுக்கு சொத்து இல்லை என்பதால் யாரும் தர்மகர்த்தா ஆக முடியவில்லை.
அப்போது சென்னை சதி வழக்கு என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. இதனைக் காண நீதிமன்றம் சென்று வந்த ராமமூர்த்திக்கு பல கம்யூனிஸ நூல்கள் படிக்கக் கிடைத்தன. 1934இல் ப.ஜீவானந்தம் ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தார். தொழிற்சங்கங்கள் உருவாகின. கொடுங்கையூரில் நடந்த ஊர்வலம் காரணமாக இவர்மீது வழக்கு, ஒரு மாதம் சிறைவாசம். 1936இல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியில் உருப்பினர் ஆனார். பல தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். இவரோடு தோளோடு தோள் நின்று போராடிய மற்ற கம்யூனிஸ்ட்டுகள் கே.ரமணி, அனந்தன் நம்பியார், வி.பி.சித்தன், கே.பி.ஜானகி அம்மாள், எம்.ஆர்.வெங்கடராமன், என்.சங்கரையா, ஏ.நல்லசிவன் ஆகியோராவர்.
இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. கம்யூனிஸ்ட்டுகள் தலைமறைவாயினர். எனினும் யாரோ ஒரு கருங்காலி காட்டிக் கொடுக்க அனைவரும் கைதாகிவிட்டனர். 1940-41இல் இவர்கள் மீது அரசாங்கத்தைக் கவிழ்க்க சதிசெய்ததாக வழக்கு தொடர்ந்தது. இவர்களுக்காக பிரபலமான இந்திய வழக்கறிஞர்கள் வாதாடினர். இதில் பி.ஆர். நாண்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மோகன் குமாரமங்கலம் மூன்று ஆண்டுகள் இப்படிப் பலரும் பல தண்டனைகள் பெற்றனர். 1943இல் பம்பாயில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குச் சென்றார். தன் வாழ்நாள் முழுவதும் பற்பல வழக்குகளைச் சந்தித்து, பிரபல கம்யூனிஸ்டாக இருந்து, பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலையின் போதும் தலைமறைவாக இருந்து பல சாகசங்களைப் புரிந்து, இறுதியில் தனது 79ஆம் வயதில் 1987 டிசம்பர் 15ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க பி.ஆர்.புகழ்!
Feedback/Errata