62 புதுச்சேரி வ. சுப்பையா

புதுச்சேரி இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பகுதி என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போரின் போது சென்னை மாகாணத்தில் போலீஸ் அராஜகத்துக்குத் தப்பி மகாகவி பாரதி புதுச்சேரி சென்று தங்கியிருந்தது தெரியும். அதுதவிர ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோரும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்படி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பூமி புதுச்சேரி. அதுவும் ஒரு அன்னியன் வசம் இருந்தது ஆம்! பிரெஞ்சுக் காரர்களின் வசம் இருந்தது. அதன் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளிதான் வ.சுப்பையா. புதுச்சேரி மற்றும் இந்தியாவிலிருந்த புதுச்சேரி காலனிகள் சுதந்திரம் பெற வ.சுப்பையா செய்த தியாக வரலாற்றின் ஒரு சிறு துளியை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இவர் பிறந்தது 7-2-1911. இந்த காலகட்டத்தில் முதலில் குறிப்பிட்ட இந்திய சுதந்திரப் போர் வீரர்கள் பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோர் அப்போது அங்குதான் இருந்தார்கள். இவர் தனது 16ஆம் வயதில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றார். அந்த மாநாட்டுக்கு டாக்டர் அன்சாரி தலைமை வகித்தார். சீனிவாச ஐயங்கார் ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பின்பு உப்பு சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். அவ்வாண்டில் ‘பிரெஞ்சு இந்திய வாலிபர் சங்கம்’ எனும் அமைப்பித் தோற்றுவித்தார். ஒரு பக்கம் சமூக சீர்திருத்தம் இவர் கவனத்தைக் கவர்ந்தது, மறுபுறம் நாட்டு சுதந்திரம் இவருக்கு முக்கியமாகத் தெரிந்தது. எனவே இரு வேறு பாதைகளிலும் பயணிக்க வேண்டியிருந்தது.

இந்த வயதில் இவருக்கு ரஷ்ய புரட்சியும், லெனின் எழுதிய நூல்களும், சிங்காரவேலு செட்டியாரின் நூல்களும் இவருக்கு இடது சாரி எண்ணங்களைத் தோற்றுவித்தது. இவர் சென்னை செல்லும் சமயத்திலெல்லாம் அங்கு சங்கு சுப்பிரமணியம் நடத்திக் கொண்டிருந்த “சுதந்திரச் சங்கு” அலுவலகம் செல்வார். அங்கு இவருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ச.து.சு.யோகியார், வ.ரா, பி.வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. மகாத்மா காந்தியின் 1934 புதுச்சேரி விஜயம் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரையாவின் அறிமுகம் இவருக்கு ஓர் புதிய வழியைக் காட்டியது.

புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களின் சங்கங்களை அங்கீகரிக்கவில்லை. எனவே சுப்பையாவின் கவனம் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகத் தொழிற்சங்கங்களைத் தோற்றுவிப்பதில் சென்றது. இராப்பகலாக இவர் அந்த வேலையில் இறங்கி தொழிலாளர் இயக்கங்களைத் தோற்றுவித்தார். அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொழில் நேரமென்பது கிடையாது. இந்தக் கோரிக்கைகளை வைத்து இவர் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். 84 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் பின்னர் 1935இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு முடிவுக்கு வந்தது.

1936இல் நடந்த வேலை நிறுத்தத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி பல தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டனர். இந்தப் போராட்டத்தில் சுப்பையாவையும் சுட்டு விட ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அது இயலவில்லை.

சுப்பையாவுக்கு நேருஜியோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பிரான்சுக்குச் சென்று புதுச்சேரிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றி அவர்களோடு விவாதிக்க சுப்பையாவை நேருஜி அனுப்பினார். இவருக்கு நேருவைத் தவிர, தீரர் சத்தியமூர்த்தி, காமராஜ், ப.ஜீவானந்தம், சுந்தரையா ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

1954 நவம்பர் முதல் தேதி பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. இந்த வெற்றிக்குப் பின்னால் சுப்பையாவின் உழைப்பும் தியாகமும் இருந்தது. இந்தப் போராட்டத்திற்காக சுப்பையா நாடுகடத்தப்பட்டு புதுச்சேரி எல்லைக்குள் போகமுடியாத சூழ்நிலை இருந்தது. புதுச்சேரியின் சுதந்திர நாளன்று சுப்பையாவை ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்காரவைத்து லட்சக்கணக்கானவர்கள் வரவேற்றனர். 1955இல் அமைந்த புதிய புதுச்சேரி அரசில் வ.சுப்பையா எதிர்கட்சித் தலைவரானார். இருமுறை புதுச்சேரி அமைச்சரவையிலும் பங்கு பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான வ.சுப்பையா எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக இருந்தார். ஏற்றமும் இறக்கமும் அவருக்கு ஓர் பொருட்டல்ல. இவர் 1993 அக்டோபர் 12இல் காலமானார். வாழ்க புதுச்சேரி வ.சுப்பையா புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.