இராம சதாசிவம் என்ற இந்த தியாகி மதுரை மாவட்டம் பெரியகுளத்தையடுத்த சவளப்பட்டி எனும் குக்கிராமத்தில் மிகமிக எளிய குடும்பத்தில் பிறந்தவரென்றாலும், இவரது தியாக வரலாறு தஞ்சை மாவட்டம் திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் 1942 ஆகஸ்ட்டில் நடந்த “திருவையாறு கலவரம்” எனும் போராட்டத்தின் மூலமாகத்தான் தொடங்கியது.
சவளப்பட்டியில் வாழ்ந்த ராமகிருஷ்ண கவுடர், கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் சதாசிவம். இவர் தனது ஆரம்ப காலக் கல்வியை வெங்கடாசலபுரம் எனும் கிராமத்தில் தொடங்கினார். அதன்பின் பல ஆண்டுகள் விவசாயத்தில் ஈடுபட்டு தனது சொந்த நிலபுலன்களை பராமரித்து வந்தார். அப்போது இளைஞர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கிய ரா.நாராயணசாமி செட்டியார் என்பவரின் தூண்டுதலின் பேரில் இவர் உசிலம்பட்டியில் அப்போது இருந்த விவசாயப் பள்ளியில் 1936 தொடங்கி 1938 வரை விவசாயக் கல்வியைப் படித்து முதன்மை மாணவராகத் தேர்ந்தார். அதனைத் தொடர்ந்து காட்டுநாயக்கன்பட்டி எனும் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ரா.நாராயணசாமி செட்டியார் இவரது ஆற்றலை இப்படி ஆரம்பப் பள்ளியில் வீணடிக்க விரும்பாமல் இவரை மேற்கொண்டு படிக்கத் தூண்டினார். 1940இல் அவருடைய சிபாரிசோடு தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க சேர்ந்தார். மதுரை மாவட்டத்திலிருந்து இவரது முகாம் திருவையாற்றுக்கு மாறியது. இங்குதான் இவருக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பு அமைந்தது.
1942இல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பும், சமஸ்கிருத பட்டப் படிப்பும் படிப்பதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேர்வார்கள். அப்படி வரும் மாணவர்கள் பெரும்பாலும் அங்கிருந்த கல்லூரி விடுதியில்தான் தங்கி படிப்பார்கள். அப்படி அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலும், அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வமும், அனுதாபமும், தீவிர பற்றும் உள்ளவர்களாக விளங்கினார்கள். அப்படிப்பட்டவர்களில் ஈரோடு நகரத்திலிருந்து வந்து தமிழ் படித்துக் கொண்டிருந்த கு.ராஜவேலு, சேலம் ஆத்தூரிலிருந்து வந்திருந்த எஸ்.டி.சுந்தரம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும் சமஸ்கிருதக் கல்லூரி மாணவருமான சோமசேகர சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.
1942 ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் மகாத்மா காந்தி தலைமையில் “வெள்ளையனே வெளியேறு” எனும் தீர்மானம் நிறைவேறியது. அந்தத் தீர்மானம் நிறைவேறிய அன்றிரவே மகாத்மா உட்பட எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காந்திஜி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதைக்கூட அரசாங்கம் தெரிவிக்கவில்லை. பெயர் சொல்லக்கூடிய அளவில் இருந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட அனைவரும் சிறைபிடிக்கப்பட்டு பாதுகாப்பு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பம்பாய் காங்கிரசுக்கு உடல்நிலை காரணமாக வராமல் பாட்னாவில் ஓய்விலிருந்த பாபு ராஜேந்திர பிரசாத், கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் உட்பட அனைவரும் சிறையில். நாடு முழுவதும் கொந்தளிப்பு. மக்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் அவரவர்க்கு தோன்றிய முறைகளில் எல்லாம் எதிர்ப்பைக் காட்டினர்.
திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்களும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு உண்ணாவிரத போராட்டத்தைக் கல்லூரி வளாகத்திற்குள் நடத்தினர். அதனை சோமசேகர சர்மா தலைமை வகித்து நடத்தினார். அன்று இரவு உண்ணாவிரதப் பந்தல் எரிந்து சாம்பலாயிற்று. போலீஸ் விசாரணை நடந்தது. 12ஆம் தேதி திருவையாறு புஷ்ய மண்டபத் துறையில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் சிதம்பரம் பிள்ளை என்பவரும், அப்போதைய செண்ட்ரல் ஸ்கூல் (தற்போது ஸ்ரீநிவாசராவ் மேல்நிலைப் பள்ளி) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் பேசினர். 13ஆம் தேதி திருவையாற்றில் கடையடைப்பு நடந்தது. காலை எட்டு மணிக்கே அரசர் கல்லூரி மாணவர்கள் தெருவுக்கு வந்து கோயிலின் தெற்கு வாயிலில் ஆட்கொண்டார் சந்நிதி அருகில் கூடினர். கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது போலீஸ் தலையிட்டு மாணவர்களை தடிகொண்டு தாக்கினர். கூட்டம் சிதறி ஓட இதில் பொதுமக்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் மீது கல் வீசப்பட்டது. தபால் அலுவலக பெயர்ப்பலகை உடைக்கப்பட்டது, தபால் பெட்டி தகர்க்கப்பட்டது, தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. சிதறி ஓடிய கூட்டம் முன்சீப் கோர்ட், பதிவு அலுவலகம் ஆகியவற்றை சூறையாடி தீயிட்டுக் கொளுத்தியது. இந்தக் கலவரம் பிற்பகல் வரை தொடர்ந்தது. மாலை தஞ்சாவூரிலிருந்து மலபார் ரிசர்வ் படை வந்தது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ராம சதாசிவம் உட்பட எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு ஆகியோரும் கைதாகினர்.
இறுதியில் 44 பேர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் ராம சதாசிவம் ஒரு வருடம் சிறை தண்டனை பெற்றார். இவருடன் எஸ்.டி.சுந்தரம், கு.ராஜவேலு போன்ற மாணவர்கள் தவிர, திருவையாற்றைச் சேர்ந்த பலரும், குறிப்பாக தற்பொழுது தஞ்சாவூர் ஸ்ரீநிவாசபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தியாகி கோவிந்தராஜு, குஞ்சுப் பிள்ளை, சுப்பிரமணியன் செட்டியார், சண்முகம், தில்லைஸ்தானம் மாணிக்கம் பிள்ளை போன்ற பலர் தண்டனை பெற்றனர்.
சிறையிலிருந்து வெளிவந்த ராம சதாசிவம் 1944இல் பெரியகுளம் நந்தனார் மாணவர் இல்லத்தில் பணியில் சேர்ந்தார். 1946இல் இவருக்குத் திருமணம் நடந்தது. சிவகாமி எனும் பெண்ணை மணந்தார். 1947இல் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் வினோபாஜி அவர்களுடைய சீடனாகி, தனது தம்பியை அவருடைய ஆசிரமத்தில் சேர்த்தார். இந்த உயர்ந்த தியாகி இன்னமும் மதுரையில் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறார். வாழ்க இவரது புகழ்.
Feedback/Errata