54 மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்

மதுரை மாநகர் அளித்த தேசபக்தர்களில் என்.எம்.ஆர்.சுப்பராமன் முக்கியமானவர். மதுரை மக்கள்தொகையில் அன்று நாலில் ஒரு பங்கு இருந்த செளராஷ்டிர சமூகத்தில் 1905 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியில் இவர் பிறந்தார். இவரது தந்தை நாட்டாண்மை ராயலு ஐயர், தாய் காவேரி அம்மாள். இவருடைய குடும்பம் நல்ல செல்வ செழிப்புள்ள குடும்பம். இவரது இளம் வயதில் விளையாட்டுக்களில் குறிப்பாக கால்பந்தாட்டம், நீச்சல், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர். படிப்பில் கேட்கவே வேண்டாம். நல்ல திறமைசாலி. இளம் வயதிலேயே முத்துராமையர் என்பவருடைய பெண்ணான பர்வதவர்த்தினியோடு இவருக்குத் திருமணம் ஆயிற்று.

படிக்கும் பருவத்திலேயே காந்தியடிகளுடைய பத்திரிகைகளைப் படித்து இவர் தேசபக்தி கொண்டார். காந்திஜியின் போராட்டங்கள் இவரைக் கவர்ந்தன. ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலை இவைகள் இவரது மனதை மிகவும் பாதித்தன. இதனால் 1923இல் இவர் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமி தரிசனம் செய்தபின் தூய கதராடை அணிந்து வந்தார். அதுமுதல் கடைசி வரை கதராடை அணிவதே அவர் வழக்கம். காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார்.

இவர் இயக்கத்தில் சேர்ந்த பின் முதன்முதலாக சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இவர் பங்குகொண்ட முதல் போராட்டம். இதில் ஜார்ஜ் ஜோசப், பசும்பொன் தேவர், காமராஜ் ஆகியோருடன் சேர்ந்து போராட வாய்ப்புக் கிடைத்தது. 1930இல் இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு காங்கிரசின் மகாநாடு மதுரையில் நடந்தது. இம்மாநாட்டுக்கு என்.எம்.ஆர்.தான் தலைமை வகித்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இன்று இராஜாஜி அரசு மருத்துவமனை இருக்கும் இடம் அன்று அடர்ந்த காடாக இருந்தது.வைகை ஆற்றின் கரைவரை ஒரே காடுதான். அந்தப் பகுதிகளில் ஓலைக் குடிசைகளில் பல கள்ளுக்கடைகள் இருந்தன. 1930 ஜூலை 30 அன்று அங்கு கள்ளுக்கடை மறியல் நடந்தது. மறியல் அகிம்சை வழியில் நடந்தது. அந்தக் குடிசைகளுக்குக் கள் குடிக்க வருபவர்களை கையெடுத்துக் கும்பிட்டு தொண்டர்கள் “வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள். அங்கு வந்த குடிகாரர்களில் சிலர் பதில் சொல்லாமல் சென்றனர், சிலர் இவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் சென்றனர், சிலர் இவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்தனர். அப்படியும் மிகப் பொறுமையோடு சத்தியாக்கிரகிகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் நின்றனர். அந்த நிலையில் திடீரென்று போலீஸார் வேனில் வந்து இறங்கி இவர்களைத் தடிகொண்டு தாக்கத் தொடங்கினர். சுற்றிலும் கூட்டம் கூடிநின்றது. அவர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். கள்ளுக்கடைகளுக்கு தீவைக்கவும் செய்தனர். போலீஸ் கண்மண் தெரியாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏழு பேர் இறந்தனர், கூட்டத்திலிருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறுநால் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒரு பெரிய கண்டன ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல் தன் தலைமையில் நடைபெறும் என்று என்.எம்.ஆர். அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர் இப்ராஹிம் என்பவர் தமுக்கு அடித்து ஊருக்கு இந்த செய்தியைத் தெரிவித்தார். மறுநாளும் வந்தது. கள்ளுக்கடை மறியல் தொடங்கியது.

மக்கட்கூட்டம் பெருக்கெடுத்து வந்தது. மாசிவீதி வழியாக ஊர்வலம் புறப்பட்டது. இது நடைபெறாமல் தடுக்க, போலீசார் என்.எம்.ஆர். உட்பட பல தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இவர் மீது தீ வைத்தல், கொள்ளை அடித்தல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் ஏற்கனவே அவினாசிலிங்கம் செட்டியாரும் இருந்தார். அங்கு இவர்கள் இருவரும் சிறைக்கைதிகளுக்கு திருக்குறள், பகவான் இராமகிருஷ்ணர் வரலாறு போன்றவற்றை போதிக்கலாயினர். கணவர் சிறை சென்ற பிறகு என்.எம்.ஆரின் மனைவி சும்மாயிருப்பாரா? அவரும் மகளிர் அணியைச் சேர்த்துக் கொண்டு அன்னியத் துணிக்கடைகளை மறியல் செய்து சிறைப்பட்டு ஆறு மாத கால தண்டனை பெற்றார்.

1934இல் மதுரை வந்த காந்தியடிகள் என்.எம்.ஆர் வீட்டில் தங்கினார். அவருக்கு என்.எம்.ஆர். ஒரு திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார். காந்திஜி இவரை வாழ்த்தினார். அதுவரை பிரம்மச்சரிய விரதம் இருந்த என்.எம்.ஆரின் மனதை மாற்றி குடும்ப வாழ்க்கைக்கு ஊக்குவித்தார். காந்திஜி மட்டுமல்ல 1935இல் பாபு ராஜேந்திர பிரசாத், 1936இல் ஜவஹர்லால் நேரு இவர்களும் தங்கள் தமிழக விஜயத்தின் போது மதுரையில் என்.எம்.ஆர். இல்லத்தில்தான் தங்கினார்கள்.

இந்த காலகட்டத்தில் தென்னக கோயில்களில் ஹரிஜனங்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தி கேட்டு காந்திஜி மிகவும் வருந்தினார். அவர்களுக்குத் திறக்காக கோயில்களுக்க்த் தானும் போவதில்லை என்ற விரதம் மேற்கொண்டார். பல கோயில்கள் அனைவருக்கும் கோயில் கதவுகளைத் திறந்து விட்டன. 1938ஆம் ஆண்டி ஜூன் மாதம் மதுரை காங்கிரஸ், ஹரிஜன் ஆலயப் பிரவெச்ச மாநாடு நடத்தியது. தொடர்ந்து மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தேறியது, பலத்த எதிர்ப்புக்கிடையில். எனினும் ராஜாஜியின் ராஜதந்திரமும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வீரமும் ஆலயப் பிரவேசம் நன்கு நடக்க துறைபுரிந்தது.

1942இல் மதுரையில் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் தடைமீறி ஊர்வலம் நடந்தது. மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமை வகித்தார். ஏ.வி. உட்பட பல தொண்டர்கள் பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று நாட்கள் கழித்து என்.எம்.ஆர். கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மதுரையில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மீண்டும் போலீஸ் தடியடி, கலகம். 1942 புரட்சியில் என்.எம்.ஆர். திருச்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார்.

இவர் மதுரை நகராட்சித் தலைவராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், டில்லி பாராளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்கு மதுரையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். மதுரை நகருக்குட்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்க நல்ல பல வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் தன் வாழ்நாளில் செய்த பல தொண்டுகளைப் பட்டியலிட்டால், அது மிகப் பெரிய நூலாக இருக்கும். இவர் வாழ்வின் கடைசி வரை காந்தியடிகளின் தொண்டராகவே வாழ்ந்தார். இறுதி நாட்களில் நாடு செல்லும் அவலம் குறித்தும், தனது தியாகங்கள் அவமதிக்கப்பட்ட அவமதிப்பு உணர்வாலும் துவண்டு போய், 1983 ஜனவரி 25 அன்று அமரர் ஆனார். வாழ்க தமிழ்நாட்டு காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.