88 மதுரை திரு கிருஷ்ண குந்து

வ.உ.சி.யின் நண்பரும், தீப்பொறி பறக்க உரையாற்றும் ஆற்றல் பெற்றவரும், மிகச் சிறந்த தேசபக்தருமான சுப்பிரமணிய சிவாவின் சீடர்களில் முக்கியமானவர் இந்த கிருஷ்ண குந்து என்பவர். இவர் மதுரையில் செளராஷ்டிர சமுதாயத்தைச் சேர்ந்த குப்புசாமி ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்தவர். தனி நபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு பெற்று சிறை புகுந்தவர். உயர் நிலைப் பள்ளி கல்வி முடித்த கிருஷ்ண குந்து 1918ஆம் ஆண்டிலிருந்து தேச சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கு பெறத் தொடங்கினார்.
சொந்தத்தில் தங்கம் வெள்ளி நகை செய்யும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். மதுரை மாநகரத்தில் என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரை காந்தி எனப் புகழ்பெற்ற மதுரை வைத்தியநாத ஐயர் போன்றவர்களோடு சேர்ந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றார். 1932இல் மகாத்மா காந்தி அறிவித்த சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர்ந்து இவர் மனையோடு கைதாகி சிறை புகுந்தார். சுப்பிரமணிய சிவாவின் பாரதாஸ்ரமத் தொண்டர்களோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேசபக்தியைத் தூண்டியவர்.
1930லும், தொடர்ந்து 1932லும் இவர் சுதந்திரப் போரில் பங்கு கொண்டு ஒரு வருட தண்டனை பெற்று சிறை சென்றார். 1940இல் மறுபடி தண்டிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனையும் 1941ல் மீண்டும் கைதாகி 4 மாத தண்டனையும் பெற்றார். இவர் திருச்சி, கண்ணனூர், அலிப்புரம் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்தார். 1941இல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பிறகு உடல் நலம் கெட்டு காலமானார். வாழ்க கிருஷ்ண குந்துவின் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.