22 மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்

மதுரை நகரமும், அதனைச் சுற்றியுள்ள பல ஊர்களும் நாடு போற்றும் நல்ல பல தியாகிகளைக் கொடுத்திருக்கிறது. தென் மாவட்டங் களில்தான் எத்தனை எத்தனை சுதந்திரப் போர் நிகழ்ச்சிகள்? பெயர் தெரிந்த, பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போர் வீரர்கள், அவர்கள் அத்தனை பேரையும் நினைவுகூர முடியாவிட்டாலும், ஒரு சிலரைப் பற்றிய விவரங்களையாவது நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் அல்லவா? அந்த வகையில் மதுரை ஸ்ரீநிவாஸ ஐயங்கார் பற்றி இந்த மாதம் பார்ப்போம்.

1919ஆம் ஆண்டு தொடங்கி ஒரு சில ஆண்டுகள் மதுரை வீதிகளில் ஓர் புதுமை தொடங்கி நடந்து வரலாயிற்று. விடியற்காலை நேரம். கிழக்கே வெள்ளி எழும் பொழுது; அப்போது மகாகவி பாரதியாரின் “பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்” எனும் பூபாள ராகப் பாடல் இனிமையாகப் பாடப்பெறும் ஒலி கேட்கும். இந்தப் பாடல் ஒலி கேட்ட மாத்திரத்தில் ஆங்காங்கே பல வீடுகளிலிருந்து சிறுவர்கள் எழுந்து வந்து அவசர அவசரமாக, அந்த பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு, கையில் ஒரு மூவண்ணக் கொடியை ஏந்திக்கொண்டு, வெள்ளை அங்கியும், காவி தலைப்பாகையுமாக வந்துகொண்டிருக்கும் அந்த மனிதரோடு சேர்ந்து கொள்வார்கள். நேரமாக ஆக அந்த பாரத மாதா பஜனை கோஷ்டி பெரிதாக ஆகிவிடும். இந்த பஜனை பல தெருக்களைச் சுற்றிவிட்டு இறுதியில் அந்த மனிதரின் வீட்டுக்குப் போய்ச்சேரும். அங்கு அந்த சிறுவர்களை உட்கார வைத்து நாட்டு நடப்பையும், ஆங்கிலேயர்களை நம் நாட்டை விட்டுத் துரத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் பேசுவார். அந்த பேச்சு அந்த இளம் சிறார்களின் அடிமனதில் போய் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டவர்கள் பலர் இவர் ஒரு ‘சுயராஜ்யப் பைத்தியம்’, இவர் சுயராஜ்யம் வாங்கப் போகிறாராம். அதற்கு இந்த குழந்தைகளின் பட்டாளத்தைத் தயார் செய்கிறார் என்று கேலி பேசுவார்கள்.

மகாகவி பாரதியார் பாடல்கள் அனைத்தையும் இவர் மதுரை தெருக்களில் பாடிப் பிரபலப் படுத்தினார். இவற்றில் பல பாடல்கள் வெளியிடப்பட்டிருக்காது; இருந்த போதிலும் அவை ஸ்ரீநிவாஸவரதன் பாடிப் பாடி பிரபலப் படுத்தி விடுவார். இவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உடனடியாக பாரதியாரும் அவரது பாடல்களும்தான் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு இவர் ‘பாரதி பக்தன்’; ஏன்? இவரை பாரதிப் பித்தன் என்றே சொல்லலாம்.

1917ஆம் வருஷம், இவர் அன்னிபெசண்ட் நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தில் பங்கு கொண்டார். சுதந்திரப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இவர் பலமுறை சிறை சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இவர் பாட்டுக்குத் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். இவரை எல்லோரும் ‘நிஷ்காம்யகர்மன்’ என்றும் ‘கர்மயோகி’ என்றும் அழைக்கலாயினர். இவர் மிகமிக
2

எளிமையானர். இவர் பிறந்தது 1896ஆம் வருஷம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று. வாழ்க்கையில் எவரிடமும் வேற்றுமை பாராட்டாதவர். அனைவரும் இவருக்குச் சமமே! தேசியம்தான் இவருக்கு மதம். தேசியம்தான் வாழ்க்கை. பிறருக்கு உதவுவதென்பது இவரது இரத்தத்தில் ஊறிய பண்பு. தலைசிறந்த தேசியவாதிகளாகத் திகழ்ந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவம், வ.வே.சு.ஐயர், மகாகவி பாரதி ஆகியோரிடம் நட்பு கொண்டு பழகியவர். 1919இல் இவர் பொதுச்சேவையில் ஈடுபட்ட நாள்முதல் காங்கிரஸ் இயக்கத்தின் கட்டளைகள் அனைத்திலும் பங்கேற்றவர். தன் கொள்கைகளைச் சிறிதுகூட விட்டுக்கொடுக்காதவர். எதிர் கட்சிக்காரர்களானாலும், அவர்களுக்கு உரிய மரியாதைக் கொடுத்து வந்தவர்.

இவர் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துத் தேறியவர். நல்ல எழுத்தாளர்; சொற்பொழிவாளர். நல்ல குரல் வளம் இருந்ததனால் நன்கு பாடக்கூடியவர். பாரதியார் பாடல்களை இனிய குரலில் பாடி பிரபலப்படுத்தியவர். இவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் அதனை பொறுப்போடும், திறமையோடும் செய்யும் ஆற்றல் படைத்தவர். கலைத் துறையிலும் இவர் தன் திறமையைக் காட்டத் தவறவில்லை. நாடகங்களில் நடித்தார்; திரைப்படங்களும் இவரை ஏற்றுக் கொண்டன. ஆங்காங்கே இவர் பல வாசகசாலைகளையும், சங்கங்களையும் அமைத்தார். இவருக்குத்தான் மகாகவி பாரதி கடையத்தில் இருந்தபோது தன் நூல்களை பிரசுரம் செய்வது பற்றி மிக விரிவாக கடிதம் எழுதினார். தீப்பெட்டிகளைப் போல் தன் நூல்கள் அனைவர் கைகளிலும் அரையணா, காலணா விலைக்குப் போய்ச்சேர வேண்டுமென்று பாரதி விரும்பி எழுதியது இவருக்குத்தான்.

1936இல் தனது நாற்பதாவது வயதில் தன் மூத்த தாரத்தை இழந்தார். 1943இல் தன் ஒரே மகனையும் இழந்தார். இவரது முதல் மனைவி ஒரு தேசபக்தை. பத்மாஸினி அம்மையார் என்று பெயர். அவரைப் பற்றி நாம் முன்பே ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறோம். மறுபடியும் அதே பத்மாஸினி எனும் பெயரில் 1946இல் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு மகனும் பிறந்தனர். இந்த பத்மாஸினியும் இவருக்கு ஏற்றபடி தேசபக்தராயும், நல்ல இசை ஞானம் உள்ளவராகவும் இருந்தார். இவர் தனது 67ஆம் வயதில் நோய்வாய்ப்பட்டு 1962 பிப்ரவரி 4ஆம் தேதி சோழவந்தானில் இறைவனடி சேர்ந்தார். வாழ்க தேசபக்தர் ஸ்ரீநிவாஸ ஐயங்கார் புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.