47 வ.ராமசாமி

இருபதாம் நூற்றாண்டில் தனது தமிழ் எழுத்துக்களின் வழியாக மக்களுக்கு விடுதலை உணர்வினை புகட்டிய தமிழ் எழுத்தாளர் வ.ரா. என அறியப்படும் வ.ராமசாமி. 1889ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகிலுள்ள திங்களூர் கிராமத்தில் பிறந்தார். 1910ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டது முதல் விடுதலை இயக்கத்தில் வ.ரா. தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். காந்தியடிகள் மீது அளவற்ற பற்று கொண்டவர் வ.ரா.

இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மூடப்பழக்க வழக்கங்களே என்று முழுமையாக நம்பினார். அதனால் அதனை எதிர்த்துப் போராடுவதில் வ.ரா. முனைந்து நின்றார்.

‘சுதந்திரன்’. ‘சுயராஜ்யா’ ஆகிய பத்திரிகைகளில் சுதந்திர உணர்வினைத் தூண்டும் விதத்திலும், மூடப் பழக்க வழக்கங்களைப் போக்கும் விதத்திலும் தொடர்ந்து எழுதி வந்தார். ‘கதர்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள், நாட்டு உணர்வினை பாமரனும் எளிதாகப் பெரும் விதத்தில் அமைந்திருந்தன. காத்தரின் மேயோ என்ற அயல்நாட்டுப் பெண் இந்திய மாதர் என்ற பெயரில் எழுதிய நூலில் இந்தியர்களை மிகவும் இழிவாகச் சித்தரித்திருந்தார். இதனை மறுக்கும் விதத்தில் வ.ரா. எழுதிய “மாயா மேயோ அல்லது மாயோவுக்கு சவுக்கடி” என்ற நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆங்கிலேயர்களின் கண்டனத்துக்கும் உள்ளானது.

1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் “ஜெயில் டயரி” என்ற பெயரில் நூலாக வெளி வந்தது. சிறையில் இருந்த காலத்தில் இவருக்கு இருந்த ஆஸ்த்துமா நோய் மிகவும் அதிகமானது. உடல் நலிந்த நிலையில் சிறையிலிருந்து வெளிவந்தார். மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிர வாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகின் தனக்கென தனி இடத்தைப் பெற்ற வ.ரா. 1951ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள் சென்னையில் காலமானார்.

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.