1

கொங்கு நாடு தந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வரிசையில் கோவை சுப்ரமணியம் என்கிற “சுப்ரி” அவர்களுக்கு ஓர் முக்கிய இடம் உண்டு. நம் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சர்வபரித்தியாகம் செய்தவர்களில் பலருடையெ பெயர் இன்று எவருக்கும் தெரியாமல் போனது நமது பாரத தேவியின் துரதிருஷ்டமே. தமிழ்நாட்டில் எதிர்மறை நாயகர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கதாநாயகர்களுக்குத் தரப்படுவதில்லை. ஒரு கோயில் பட்டாச்சாரியார் கோயில் கருவறையில் படுகொலைச் செய்யப்படுகிறார். கொலைகாரர்கள் பெருமாளின் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட அந்த பட்டாச்சாரியாரின் குடும்பம் எப்படியெல்லாம் வருந்துகிறது என்பது நமது ஊடகங்களின் கண்களுக்குத் தென்படவில்லை. ஆனால், அந்த கொலைகாரன் சிறையில் எப்படி வருந்துகிறான் என்று எழுதியது தமிழ்நாட்டின் மிகப்பெரிய வாரமிருமுறை தமிழ்ப் பத்திரிகை. நமது பத்திரிகை தர்மத்தை நினைத்து வருத்தப்படுவதா, நமக்காக உயிர்த்தியாகம் செய்த நாட்டு விடுதலைப் போராட்டத் தியாகிகளை அறவே மறந்துபோன தமிழ்ச் சமுதாயத்தை நினைத்து வருத்தப்படுவதா? வேண்டாம் இந்தக் கவலையைத் தூர எறிந்துவிட்டு “சுப்ரி” அவர்களின் வரலாற்றைப் பார்ப்போம்.

கோயம்புத்தூரில் அந்த காலத்தில் சலிவன் தெரு என்று ஒரு தெரு உண்டு. கோவை வேணுகோபால சுவாமி தெப்பக்குள வீதிதான் அது. அதற்கு “சுப்ரி” தெரு என்றொரு பெயர் உண்டு. கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் தோன்றி வளர காரணமாக இருந்தவர்களுள் சுப்ரி அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. தோற்றத்தில் மிகவும் மெலிந்தவர், மன உறுதியில் எஃகினைக் காட்டிலும் உறுதி படைத்தவர். இவர் அப்போதைய கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவுக்குச் செயலாளராக இருந்து ஏறக்குறைய எல்லா அனைத்திந்திய காங்கிரஸ் மாநாடு களுக்கெல்லாம் சென்று வந்தவர். கோவை மாவட்டத்தில் கட்சிக்கு கிராமம் தோறும் கிளைகளைத் தோற்றுவித்தவர். 1921இல் நாக்பூரில் நடந்த கொடிப் போராட்டத்துக்கு இவர் சுமார் 12 தொண்டர்களோடு சென்று கலந்து கொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இவருடைய தந்தையார் பெயர் கிருஷ்ண ஐயர்.

1924ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் பயங்கர வரட்சி ஏற்பட்டது. மக்கள் பட்டினியால் மடிந்தனர். அரசாங்கம் இதை அதிகம் பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியது. ஆனால் சுப்ரி அவர்கள் அவிநாசிலிங்கம் செட்டியார், சி.பி.சுப்பையா ஆகியோருடன் சேர்ந்து பல நிவாரண உதவிகளைச் செய்து மக்கள் மாண்டுபோகாமல் காத்தனர். 1925இல் அகில இந்திய நூற்போர் சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்க கதர் இயக்கத்தின் நாயகரான கோவை அய்யாமுத்து அவர்களோடு சேர்ந்து சுப்ரியின் பங்களிப்பு முக்கியமானது. இந்த சங்கம் திருப்பூரில் தொடங்கப்பட்ட காலத்துக்குப்பின் கதர் உற்பத்தில் பல கிராமங்களிலும் அதிகரித்தது. 1929இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மகாநாட்டில் பூரண சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதியை நாட்டின் விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை கோவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுப்ரி அவர்களும் மற்ற தேசபக்தர்களும் மக்களுக்குத் தெரிவித்தனர்.

1930இல் மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது அந்த போராட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் சுப்ரி கோவையில் ஊர்வலங்களை நடத்தினார். இந்தப் போராட்டத்தில் சுப்ரி ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை பெற்றார். அவிநாசிலிங்கம் செட்டியார், பாலாஜி போன்றவர்களும் தண்டிக்கப்பட்டனர். 1932இல் அந்நிய ஆங்கில அரசு இந்திய காங்கிரஸ் இயக்கத்தை சட்ட விரோதமானது என்று தடை செய்தபோது தலைவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகினர். அப்போது அந்த அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக சுப்ரி, அவரது இளம் மனைவி கமலம், தாயார் பாகீரதி அம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவருக்கும் ஆறுமாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான் திருப்பூரில் போலீசாரின் தடியடியில் குமாரசாமி எனும் தொண்டர் (திருப்பூர் குமரன்) காலமானார்.

1933இல் மறுபடியும் அந்நிய துணிக்கடை மறியலில் ஈடுபட்டு இவரது மனைவி கமலம், மற்ற தொண்டர்களான அம்புஜம் ராகவாச்சாரி, முத்துலட்சுமி, நாராயண சாஸ்திரி ஆகியோர் நான்கு மாத சிறை தண்டனை பெற்றனர்.

அதே ஆண்டில் ராஜாஜி தலைமையில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக சுப்ரி, திருமதி சுப்ரி, கோவிந்தம்மாள், அய்யாமுத்து, உடுமலை சாவித்திரி அம்மாள், பி.எஸ்.சுந்தரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் கைதாகி ஆறுமாத தண்டனை பெற்றனர். சுப்ரி அகில இந்திய தலைவர்கள் பலரை அழைத்து வந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தினார். ராஜாஜியுடன் இவர் வேலூர், கடலூர் சிறைகளில் இருந்திருக்கிறார்.

சுப்ரி அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உண்டு. காந்தியடிகளின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை இவர் செய்து வந்ததனால், இவரை “மை லெளட் ஸ்பீக்கர்” என்றே காந்தி அன்போடு அழைத்தார். 1934இல் நடந்த தேர்தலில் அவிநாசிலிங்கம் செட்டியாரின் வெற்றிக்காக இவர் மிகவும் பாடுபட்டார். 1937இல் நடந்த சட்ட சபை தேர்தலிலும் கோவை நீலகிரி மாவட்டங்களில் காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தார். 1941இல் ஜாலியன்வாலாபாக் தினமாக அனுசரித்து கூட்டம் நடத்திய காரணத்துக்காக சிறை தண்டனை பெற்று பொள்ளாச்சி கொண்டு செல்லப்பட்டார். 1942இல் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் இவர் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பிறகு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தபின் பொது விடுதலையின்போது விடுதலையாகி வெளியே வந்தார்.

இவர் கோவை மாவட்ட காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸின் செயற்குழு உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், கோவை நகர சபை தலைவர்; 1947-52 காலகட்டத்தில் சென்னை சட்டசபை உறுப்பினர் இப்படி பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். இவர் முருகப் பெருமானைக் குறித்து ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதற்கு “முருக கானம்” என்று பெயரிட்டார். 90 வயதையும் தாண்டி இளமையோடு வாழ்ந்த மறக்கமுடியாத விடுதலை வீரர் “சுப்ரி”. வாழ்க அவரது புகழ்!

License

தமிழக தியாகிகள் Copyright © by seesiva. All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.